தேடுதல்

திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையைக் கேட்க வந்திருந்த இளையோர் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையைக் கேட்க வந்திருந்த இளையோர் 

இளையோரே, வயதுமுதிர்ந்தோரை கட்டித் தழுவுங்கள்

தற்போதைய நலவாழ்வு விதிமுறைகள் நேரடியான சந்திப்பை தடைசெய்திருப்பதால், ஸ்மார்ட் தொலைபேசியில், நேரில் பார்த்து பேசுவதுபோன்ற அமைப்பில், வயதில் முதிர்ந்தோரை அழைத்து உரையாடுங்கள் – திருத்தந்தையின் விண்ணப்பம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வயதுமுதிர்ந்தோரை அரவணைப்பது, சமுதாய ஊடகங்களிலுள்ள காணொளி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, ஒருவரைப் பார்த்து உரையாடுவது போன்றவை வழியாக, அவர்களோடு தொடர்புகொள்ளவும், தங்களின் கனிவன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தவும் வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரைக்குப்பின் இளையோரைக் கேட்டுக்கொண்டார்.

இயேசுவின் தாத்தா, பாட்டியான புனிதர்கள் சுவக்கீன், அன்னா திருவிழா, ஜூலை 26, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதை நினைவுபடுத்திய திருத்தந்தை, வயதுமுதிர்ந்தோர் பெரும்பாலான நேரங்களில், தனியாகவும், முதியோர் இல்லங்களிலும் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள், பல மாதங்களாக, தங்களின் அன்புக்குரியவர்களை நேரில் சந்திக்காமல் உள்ளனர் என்றும் கூறினார்.

அன்பு இளையோரே, வயதுமுதிர்ந்தோர் ஒவ்வொருவரும் உங்களின் தாத்தா பாட்டிகள், அதனால், அவர்களை, தனியே விட்டுவிடாதீர்கள் என்று உங்களை கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன், அவர்களோடு தொடர்புகொள்ள அன்பின் கற்பனை முறைகளைப் பயன்படுத்துங்கள் என்று கூறியத் திருத்தந்தை, அதற்கு சில பரிந்துரைகளையும் முன்வைத்தார்.

தற்போதைய நலவாழ்வு விதிமுறைகள் நேரடியான சந்திப்பை தடைசெய்திருப்பதால், ஸ்மார்ட் தொலைபேசியில், நேரில் பார்த்து பேசுவதுபோன்ற அமைப்பில், அவர்களை அழைத்து உரையாடுங்கள், இயலக்கூடிய சமயங்களில், அவர்களை, நேரில் சென்று சந்தியுங்கள், அவர்களைக் அரவணைத்து முத்தம் கொடுங்கள் என்று, இளையோரிடம் திருத்தந்தை கூறினார்.

வயதுமுதிர்ந்தோர் உங்களின் வேர்கள் என்பதை இளையோருக்கு நினைவுபடுத்திய திருத்தந்தை, வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்ட மரம், வளராது, அல்லது, மலர்களையோ கனிகளையோ தராது என்றும் கூறிய திருத்தந்தை, வயதுமுதிர்ந்தோருடன் தொடர்பில் இருப்பது முக்கியம், அவ்வாறுதான், நாம் நம் வேர்களோடு தொடர்பில் இருக்கமுடியும் என்று கூறினார்.

மரங்களில் நாம் பார்க்கும் மலர்கள், பூமிக்கு அடியிலிருந்து வருகின்றன என்று அர்ஜென்டீனா நாட்டு கவிஞர் ஒருவர் கூறியுள்ளார் என்றுரைத்த திருத்தந்தை, நம் தாத்தா பாட்டிகளுக்கு ஆரவாரமான கரவொலியை எழுப்புவோம் என்று, வளாகத்தில் நின்றவர்களைக் கேட்டுக்கொண்டதோடு, அவர்கள் கரவொலி எழுப்பிய வேளையில்,  அவர்களோடு சேர்ந்து கைதட்டினார்.

27 July 2020, 14:17