தேடுதல்

Vatican News
ஜூலை 15 சிரியாவில் நிகழ்ந்த வான்வழித் தாக்குதலால் சிதைந்த பகுதி ஜூலை 15 சிரியாவில் நிகழ்ந்த வான்வழித் தாக்குதலால் சிதைந்த பகுதி  (AFP or licensors)

கொரோனா கிருமியுடன் போராட, போர்நிறுத்தம் தேவை

இலட்சக்கணக்கான உயிர்களைக் கொன்றுள்ள கொரோனா தொற்றுக்கிருமியுடன் போராடி வெற்றிபெறுவதற்கு, மக்களின் உயிர்களைப் பலிவாங்கும் போர்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் கொன்றுள்ள கொரோனா தொற்றுக்கிருமியுடன் போராடி வெற்றிபெறுவதற்கு, இவ்வுலகில், மக்களின் உயிர்களைப் பலிவாங்கும் போர்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று திருத்தந்தை மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்துள்ளார்.

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்தோருக்கு, ஜூலை 19, இஞ்ஞாயிறன்று, மூவேளை செப உரை வழங்கியபின், உலகெங்கும் கொரோனா கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் அனைவருடன், குறிப்பாக, இந்தக் கொள்ளை நோய் காலத்திலும் உள்நாட்டு மோதல்களைச் சந்தித்துவரும் மக்களுடன் தான் ஒன்றித்திருப்பதாக திருத்தந்தை கூறினார்.

உலகெங்கும் போர் நிறுத்தம் நடைபெறுவதற்கு, ஐ.நா.வின் பாதுகாப்பு அவை, ஜூலை மாதத் துவக்கத்தில் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்துள்ளதை தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரோனா கிருமியால் உலகெங்கும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ள வேளையில், மக்களைக் கொல்லும் போர்கள் இன்னும் தொடர்வது, பெரும் கொடுமை என்று கூறினார்.

ஆர்மேனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கிடையே அண்மையில் உருவாகியுள்ள மோதல்கள், ஒரு போராக உருவாகும் ஆபத்து உள்ளது என்பதை குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு நாடுகளுக்கிடையிலும் அமைதி நிலவ அழைப்பு விடுத்தார்.

19 July 2020, 12:45