தேடுதல்

புலம்பெயர்ந்தோருடன் திருப்பலி - 8 ஜூலை 2019. புலம்பெயர்ந்தோருடன் திருப்பலி - 8 ஜூலை 2019. 

லாம்பதூசா தீவில் புலம்பெயர்ந்தோரை சந்தித்ததன் 7ம் ஆண்டு

மனித உடன்பிறந்தநிலை என்பதே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சொல்லாக இருந்துவருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இத்தாலி நாட்டிற்குள் நுழைய தரைவழி அனுமதி மறுக்கப்பட்டதால், கடல் வழியாக வரும் புலம்பெயர்ந்தோர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இத்தாலியின் லாம்பதூசா தீவுக்குச் சென்று, அம்மக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு சந்தித்ததன் 7ம் ஆண்டு நிறைவையொட்டி, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், அவர், சிறப்புத் திருப்பலியொன்றை நிறைவேற்ற உள்ளார்.

ஜூலை 08, இப்புதனன்று, உரோம் நேரம், காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள இத்திருப்பலியில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் குடியேற்றதாரர், மற்றும், புலம்பெயர்ந்தோர் பிரிவின் அங்கத்தினர்கள் மட்டுமே பங்குபெறுவர் என, திருப்பீட செய்தித்துறை அறிவித்துள்ளது.

இயற்கை மீதும், மனித சமுதாயத்தின் மீதும் தீராத அன்புகூர்ந்திருந்த அசிசி நகர், புனித பிரான்சிஸ் பெயரை தெரிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி, திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட துவக்க காலத்திலிருந்தே உடன்பிறந்த உணர்வு என்ற உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததுடன், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அபுதாபியில் அல் அசார் இஸ்லாம் தலைமைக்குருவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு, மனிதகுல உடன்பிறந்தநிலை என்ற பெயரையே வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும், உடன்பிறந்த உணர்வு

அமைதிக்காகச் செபிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் நாட்டின் அரசுத்தலைவர், Shimon Peres அவர்களுக்கும், பாலஸ்தீனத் தலைவர், Abu Mazen அவர்களுக்கும் இடையே வத்திக்கான் தோட்டத்தில் இடம்பெற்ற சந்திப்பையும், சகோதரத்துவ உடன்பிறந்த நிலையின் மிகப்பெரிய அடையாளம் என்றே அழைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிற கிறிஸ்தவ சபைத்தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்களையும், கிறிஸ்தவ விசுவாசத்தில் சகோதரர்களிடையே இடம்பெற்ற சந்திப்பு என்றே அழைத்து எப்போதும் உடன்பிறந்த உணர்வு என்ற உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்.

போரிட்டு வந்த சூடான் தலைவர்களை வத்திக்கானில் சந்தித்தபோதும், ஒரு சகோதரனாக அவர்களிடம், அமைதியில் நிலைத்திருக்குமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கொள்ளைநோய் காலத்தையும் தாண்டி, மனிதகுல ஒருமைப்பாட்டுடன் கூடிய ஓர் உலகை கட்டியெயெழுப்ப, ஒவ்வொருவரிலும் உடன்பிறந்த உணர்வு மேலோங்கவேண்டும் என நமக்கும் அழைப்பு விடுத்துவருகிறார்.

வளர்ந்த நாடு, ஏழை நாடு என்ற பாகுபாடின்றி, அனைத்து நாடுகளும் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றையச் சூழலில், அதிகம் அதிகமாக உடன்பிறந்த உணர்வு நம்மில் எழுந்து, மற்றவர்கள் குறித்த அக்கறையற்ற நிலை மறைந்து, ஒரே குடும்பம் என்ற உணர்வு எழவேண்டும் எனவும் தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தை, லாம்புதுசா தீவிற்குச் சென்று புலம்பெயர்ந்த மக்களைச் சந்தித்ததன் 7ம் ஆண்டு நிறைவின் நினைவாக, இப்புதனன்று காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்ற உள்ளார்.

07 July 2020, 14:08