தேடுதல்

ஏமனில் இடம்பெறும் போரின் விளைவு ஏமனில் இடம்பெறும் போரின் விளைவு 

உலக அளவில் போர்நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட...

கோவிட்-19 கொள்ளைநோயால் துன்புறும் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கென, உலக அளவில், உடனடி போர்நிறுத்தத்திற்கு, ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயால் துன்புறும் மக்களுக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதற்கென, உலக அளவில், போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவையின் தீர்மானம், உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று கேட்டுக்கொண்டார்.

ஜூலை 05 இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கியபின்னர், இவ்வாறு, போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொரோனா கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியால் துன்புறும் மக்களுக்கு, மனிதாபிமான உதவிகள் உடனடியாக வழங்கப்படுவதற்கு, உலகளாவிய போர்நிறுத்தம் மிகவும் தேவைப்படுகின்றது என்றும், இது, உலகில், அமைதியும் பாதுகாப்பும் நிலவ முக்கியமானது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்து சூழ்நிலைகளிலும் போர் நிறுத்தம் உடனடியாக இடம்பெறவேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு அவை, ஜூலை முதல் தேதி, ஒரேமனதாக கொண்டுவந்துள்ள தீர்மானம், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்ட திருத்தந்தை, இந்த தீர்மானம், உலகின் வருங்கால அமைதி நோக்கி மேற்கொள்ளப்பட்ட துணிவான முதல் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி ஐ.நா. நிறுவனத்தின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறுவதற்கு அழைப்பு விடுத்தார், அவரைத் தொடர்ந்து, திருத்தந்தையும், கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி, அதே கருத்துக்காக உலகினரைக் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2020, 12:45