தேடுதல்

Vatican News
உக்ரைன் நாட்டில் போரில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் உக்ரைன் நாட்டில் போரில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் 

உக்ரைன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு வரவேற்பு

இரஷ்ய ஆதரவுபெற்ற பிரிவினைவாத குழுக்களுக்கும், உக்ரைன் இராணுவத்திற்கும் இடையே, 2014ம் ஆண்டு ஏப்ரலிலிருந்து நடைபெற்றுவரும் போரால், 10,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், ஏறத்தாழ 24,000 பேர் காயமுற்றுள்ளனர், மற்றும், 15 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில், அமைதியை உருவாக்கும் நோக்கத்தில், இந்த வாரத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பது குறித்து தன் பாராட்டையும், வரவேற்பையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 26, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, இறையாட்சியை அயராது தேடுகின்றவர்களாக மாறுங்கள் என்று,  இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி நண்பகல் மூவேளை செப உரை வழங்கியபின், இவ்வாறு கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நல்ல பயன் அளிக்கக்கூடிய முறையில் ஆயுதங்கள் களையப்படுமாறும், நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கை இடம்பெறுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கிழக்கு உக்ரைனில் நடைபெற்ற போரில் ஈடுபட்டிருந்த குழுக்கள், மின்ஸ்க் நகரில், அண்மையில், Donbass பகுதியில் அமைதி நிலவ புதியதொரு போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டு இருப்பதை அறிந்து மகிழ்கிறேன் என்று கூறினார். 

போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கு தீவிர ஆவலுடன் கையெழுத்திடப்பட்ட இந்த நன்மனதிற்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுதக்களைவு மற்றும், நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படுவதன் வழியாக, இது நடைமுறைப்படுத்தப்படும் என்ற தன் ஆவலை வெளியிட்டுள்ளார்.

இதன் வழியாக, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கும் மற்றும், அவர்களுக்குத் தேவையான ஒப்புரவுக்கு அடித்தளமிடும் மற்றும், நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் என்றும், திருத்தந்தை கூறினார்.

Donetsk மக்கள் குடியரசுக்கும், உக்ரைன் இராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் போரை நிறுத்துவது குறித்து ஏகற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கூறுகள் நடைமுறைப்படுத்தப்படும் முறைகள் குறித்து, தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கண்காணிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெலோருஷ்ய தலைநகர் மின்ஸ்க் நகரில், ஜூலை 22, இப்புதனன்று கையெழுத்திடப்பட்ட புதிய போர்நிறுத்த ஒப்பந்தம், ஜூலை 27, இத்திங்களன்று நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரஷ்ய ஆதரவுபெற்ற பிரிவினைவாத குழுக்களுக்கும், உக்ரைன் இராணுவத்திற்கும் இடையே, 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நடைபெற்றுவரும் போரால், 10,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், ஏறத்தாழ 24,000 பேர் காயமுற்றுள்ளனர், மற்றும், 15 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்.

27 July 2020, 14:05