தேடுதல்

Vatican News
கர்தினால் Zenon Grocholewski அவர்களின் அடக்கச் சடங்கு கர்தினால் Zenon Grocholewski அவர்களின் அடக்கச் சடங்கு  (Vatican Media)

கர்தினால் Grocholewskiயின் ஆன்மா நிறையமைதியடைய செபம்

கத்தோலிக்க கல்விப் பேராயத்தின் முன்னாள் தலைவராகிய கர்தினால் Grocholewski அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் உச்ச நீதிமன்றமான Apostolic Signaturaவின் தலைவராக, 1972ம் ஆண்டு முதல், 1999ம் ஆண்டு வரை பணியாற்றியவர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கர்தினால் Zenon Grocholewski அவர்கள், வத்திக்கானில் பணியாற்றிய காலக்கட்டத்தில், அருள்பணித்துவ வாழ்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார், திருஅவையைக் கட்டியெழுப்புவதிலும், நற்செய்தியை வாழ்வாக்குவதிலும் பிரமாணிக்கமாய் இருந்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரைப் பாராட்டியுள்ளார்.

ஜூலை 17, இவ்வெள்ளியன்று, தனது 80வது வயதில் இறைவனடி சேர்ந்த போலந்து நாட்டு கர்தினால் Grocholewski அவர்கள், உரோம் கிரகோரியன் மற்றும், இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகங்களில், திருஅவை சட்டயியல் துறையில் மதிப்புமிக்க பேராசிரியராகத் திகழ்ந்தார் மற்றும், பல நூல்களை எழுதியுள்ளார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

கர்தினால் Grocholewski அவர்கள், உயிரிழந்ததை முன்னிட்டு, அவரின் சகோதரருக்கு இரங்கல் தந்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரின் ஆன்மா நிறையமைதியடைய செபிப்பதாகவும், அவரின் பிரிவால் துயருறும் எல்லாருக்கும் தனது அருகாமையைத் தெரிவிப்பதாகவும், அதில் குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்க கல்விப் பேராயத்தின் முன்னாள் தலைவராகிய கர்தினால் Grocholewski அவர்கள், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களுடனும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடனும் நெருங்கிப் பணியாற்றியவர்.

போலந்து நாட்டின் Bródki என்ற நகரில், 1939ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பிறந்த கர்தினால் Grocholewski அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் உச்ச நீதிமன்றமான Apostolic Signaturaவில், ஆவணப்பதிவாளர், சான்சிலர், செயலர் ஆகிய பதவிகளை வகித்து, பின்னர், 1972ம் ஆண்டு முதல், 1999ம் ஆண்டு வரை அதன் தலைவராகப் பணியாற்றியவர். 1983ம் ஆண்டில் திருஅவை சட்ட முன்வரைவு தொகுப்பு ஒன்றை தயாரிக்க, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவில் இவரும் ஒருவர்.

தனது பிறந்த நாளான ஜூலை 17ம் தேதி, 81வது வயதைத் துவக்கிய நாளன்று, இறைபதம் சேர்ந்த கர்தினால் Grocholewski அவர்கள், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், திருஅவை சட்டயியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.

கர்தினால் Grocholewski அவர்களை இறுதி வழியனுப்பும் திருப்பலி, ஜூலை 18, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்றது. திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Grocholewski அவர்களின் உடலை ஆசீர்வதித்து, இறுதி மரியாதை செலுத்தினார். 

கர்தினால் Grocholewski அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 221 ஆகவும், அவர்களில் 80 வயதுக்குட்பட்டவர்கள் 122 ஆகவும் மாறியுள்ளன.

மேலும், போலந்து நாட்டு ஆயர்களும், கர்தினால் Grocholewski அவர்களின் மறைவையொட்டி, தங்களின் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

18 July 2020, 12:43