தேடுதல்

Vatican News
 “Cammino di Santiago” திருப்பயணம் மேற்கொள்ளும்  மனநலம் குன்றிய சிறுவன் “Cammino di Santiago” திருப்பயணம் மேற்கொள்ளும் மனநலம் குன்றிய சிறுவன் 

மாற்றுத்திறனாளி திருப்பயணியின் சான்றுக்கு வாழ்த்து

நடப்பதற்கு, நீ துணிவு கொண்டதற்கும், உன்னோடு நடப்பதற்கு பலருக்கு அழைப்பு விடுத்ததற்கும் நன்றி சொல்கிறேன், உனது நடைப்பயணத்தில் நீ சந்தித்தவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளாய் – மாற்றுத்திறனாளியான சிறுவன் அல்வாரோவிடம் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இஸ்பெயின் நாட்டு திருத்தூதர் சந்தியாகோ திருத்தலத்திற்கு, கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், நீண்ட நடை திருப்பயணம் ஒன்றை நிறைவுசெய்துள்ள மாற்றுத்திறனாளியான சிறுவன் ஒருவனை ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்பெயின் நாட்டின் Malaga நகரைச் சேர்ந்த, 15 வயது நிரம்பிய Alvaro Calvente என்ற மனநலம் குன்றிய சிறுவன், தனது குடும்ப நண்பர் ஒருவருடனும், தனது தந்தையுடனும் “Cammino di Santiago” என்ற இந்த திருப்பயணத்தை கடந்தவாரம் நிறைவுசெய்துள்ளான்.

இச்சிறுவனைப் பாராட்டியும், ஊக்கப்படுத்தியும் மடல் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், இச்சிறுவன் இத்திருப்பயணத்தை மேற்கொண்ட துணிச்சலைப் பாராட்டியுள்ளார். 

அன்புள்ள அல்வாரோ, நீ Santiago திருத்தலத்திற்கு நடைப்பயணமாகத் திருப்பயணம் மேற்கொண்டு முடித்துள்ளாய் என்று, உனது தந்தை எனக்கு எழுதிய மடல் கிடைத்தது,  நீ உனது முதுகில் சுமந்துசென்ற பையில் உனது வேண்டுதல்களை மட்டும் அல்ல, உனது பயணத்தில் உன்னோடு இணைந்தவர்கள் மற்றும், உன்னிடம் செபிக்கக் கேட்டுக்கொண்டவர்கள் ஆகிய அனைவரது விண்ணப்பங்களையும் சுமந்து சென்றுள்ளாய் என்று, திருத்தந்தை அம்மடலில் எழுதியுள்ளார். 

நடப்பதற்கு, நீ துணிவு கொண்டதற்கும், உன்னோடு நடப்பதற்கு பலருக்கு அழைப்பு விடுத்ததற்கும் நன்றி சொல்கிறேன், இந்த கொள்ளைநோய்க்கு மத்தியில், நாம் அதோடு வாழ்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம், ஆனால் நீ, உனது நேர்மை, மகிழ்வு மற்றும் புன்னகையால், உனது நடைப்பயணம் மற்றும், சமுதாய ஊடகம் வழியாக, நீ சந்தித்தவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளாய் என்றும், திருத்தந்தை தன் மடலில் குறிப்பிட்டுள்ளார். 

நாம் ஒருபோதும் தனியாக நடப்பதில்லை

நாம் வாழ்வில் எதற்கும் அஞ்சத் தேவையில்லை எனவும், நம் மகிழ்வைக் கண்டுணரவேண்டும் எனவும், அல்வாரோவின் திருப்பயணம் கற்றுத்தந்துள்ளது, ஏனெனில் வாழ்வில் நாம் தனியாக நடக்கவில்லை என்று எழுதியுள்ள திருத்தந்தை, ஆண்டவர் எப்போதும் நம்மோடு நடக்கிறார் என்று கூறியுள்ளார்.

அல்வாரோ, உனது சான்றுக்கும், செபத்திற்கும் நன்றி என அம்மடலில் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறுவன் அல்வாரோவை கார்மேல் அன்னை மரியா எப்போதும் தன் அரவணைப்பில் வைத்து பாதுகாக்குமாறு செபித்துள்ளார்.

அம்மடலின் இறுதியில், அல்வாரோவின் பெற்றோர், சகோதரர் சகோதரிகள் ஆகிய அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள திருத்தந்தை, தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை 20, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறுவன் அல்வாரோவிற்கு எழுதிய மடலை, ஜூலை 23, இவ்வியாழனன்று, Malaga மறைமாவட்டம், தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

Malaga மறைமாவட்டம் வெளியிட்ட தகவலின்படி, சிறுவன் Alvaro Calventeவுக்கு பத்து சகோதரர் சகோதரிகள் உள்ளனர். இவனது குடும்பம், புனித பேட்ரிக் பங்குத்தளத்தில் இயங்கும் Neocatechumenal Way என்ற பக்த சபையில் உறுப்பினராக உள்ளது. இந்த சிறுவன் அக்குடும்பத்தில் ஏழாவதாகப் பிறந்தவன். 

நம்பிக்கைத் திருப்பயணம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்வு, @CaminodeAlvaro என்ற முகவரியில் டுவிட்டரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி சிறுவன் Alvaro Calvente, திருத்தந்தையைப் நேரில் சந்திக்கும் நாளுக்காகவும் காத்திருக்கிறான் என்றும், அல்வாரோவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

24 July 2020, 12:24