தேடுதல்

நன்கொடை வாகனத்தைப் பெறும் திருத்தந்தை பிரான்சிஸ்  நன்கொடை வாகனத்தைப் பெறும் திருத்தந்தை பிரான்சிஸ்  

அன்னை மரியா திருத்தலத்திற்கு நோயுற்ற குழந்தைகள் செல்ல...

ஜெமெல்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள், லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு திருப்பயணம் செல்வதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய உதவி

ஜெரோம் லூயிஸ்: வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள், லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு திருப்பயணம் செல்வதற்கு உதவியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு பரிசாக வழங்கப்பட்ட மின்சக்தி சைக்கிள் ஒன்றை, ஏலத்தில் விட்டு நிதி திரட்டுவதற்கு, UNITALSI என்ற பிறரன்பு அமைப்பிடம் வழங்கியுள்ளார்.

நோயுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு அழைத்துச் செல்லும் பிறரன்பு அமைப்பான UNITALSIயின் இணையதளத்தில், திருத்தந்தை வழங்கிய சைக்கிள் குறித்த விவரங்களும், அதை ஏலத்தில் பெறுவதற்கு உரிய வழிகளும் கூறப்பட்டுள்ளன.

வருகிற ஆகஸ்ட் மாதத்தில் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு மீண்டும் திருப்பயணங்கள் துவங்கும் வாய்ப்புக்கள் இருப்பதால், அவ்வேளையில், ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை அங்கு அழைத்துச் செல்லும் முயற்சிகளை UNITALSIயின் உரோம் கிளை மேற்கொண்டு வருகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குழந்தைகள் மீது, குறிப்பாக, நோயுற்ற குழந்தைகள் மீது கொண்டுள்ள பாசத்தை அனைவரும் அறிவோம், அந்தப் பாசத்தின் ஒரு வெளிப்பாடாக திருத்தந்தை தங்களுக்கு வழங்கியுள்ள இந்த மின்சக்தி சைக்கிள் அமைத்துள்ளது என்று UNITALSI அமைப்பின் உரோம் கிளையின் தலைவர் Preziosa Terrinoni அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், UNITALSI அமைப்பில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்களான இளையோரை, திருத்தந்தை எப்போதும் ஊக்குவித்து வருகிறார் என்று, இவ்வமைப்பின் ஆன்மீக வழிகாட்டி, அருள்பணி Gianni Toni அவர்கள் கூறியுள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2020, 13:55