தேடுதல்

ஏமனில் உலக உணவு திட்ட அமைப்பின் பணிகள் ஏமனில் உலக உணவு திட்ட அமைப்பின் பணிகள்  

கோவிட்-19: WFP அமைப்புக்கு திருத்தந்தை உதவி

கோவிட்-19ஆல் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, குறிப்பாக, ஏழை நாடுகளுக்கு, அண்மையில் 35 வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், ஏறத்தாழ 20 இலட்சம் யூரோக்கள் பணத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியிருக்கும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக, உலக உணவு திட்ட அமைப்பு ஆற்றிவரும் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 25,000 யூரோக்களை அந்த அமைப்புக்கு வழங்கியுள்ளார்.

ஜூலை 03, இவ்வெள்ளியன்று திருத்தந்தை வழங்கியுள்ள இந்த நன்கொடை பற்றி அறிக்கை வெளியிட்ட, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, இத்தகைய செயல்கள் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமியின் பாதிப்புக்களால் துன்புறுவோர் மற்றும், ஏழைகளுக்கு ஆதரவாகப் பணியாற்றுகின்றவர்களுடன் தனது அருகாமையை தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார் என்று கூறியுள்ளது.

இந்த நன்கொடை, ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை அமைப்பு (FAO), வேளாண் வளர்ச்சிக்கு பன்னாட்டு நிதி அமைப்பு (IFAD), மற்றும், உலக உணவு திட்ட அமைப்பு (WFP) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் திருப்பீடத்தின் பிரதிநிதியின் ஒத்துழைப்போடு ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை வழியாக வழங்கப்பட்டுள்ளது.

சமுதாய நிலையற்றதன்மை, உணவுப் பாதுகாப்பின்மை, வளர்ந்துவரும் வேலைவாய்ப்பின்மை, வறிய நாடுகளின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார அமைப்புகள் போன்றவற்றை களைவதற்கென, WFP அமைப்பும், மற்ற நாடுகளும், மக்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கு ஆதரவாய்ச் செயல்படுவதை, தந்தைக்குரிய அன்பால் ஊக்கப்படுத்தும் ஓர் அடையாளமாக, திருத்தந்தையின் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என்று, அந்த அறிக்கை கூறுகிறது. 

கோவிட்-19 கொள்ளைநோயை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆதரவை தொடர்ந்து வழங்கிவருவதன் அடையாளமாக, இந்த கொள்ளைநோயால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, குறிப்பாக, ஏழை நாடுகளுக்கு, அண்மையில் 35 வென்டிலேட்டர்களை அனுப்பியுள்ளார். அதோடு, ஏறத்தாழ 20 இலட்சம் யூரோக்கள் பணத்தையும், திருத்தந்தை வெவ்வேறு நாடுகளுக்கு அளித்துள்ளார்.  

04 July 2020, 14:07