தேடுதல்

Vatican News

கடலில் பணியாற்றுவோருக்கு திருத்தந்தையின் செய்தி

கோவிட் 19 கிருமியால் உருவாகியுள்ள நெருக்கடி வேளையிலும், கடினமான கடல் சார் பணிகளை மேற்கொண்டு, மனித குலத்திற்கு உணவு வழங்கிவரும் தொழிலாளிகளுக்கு நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 19, இவ்வெள்ளியன்று, சிறப்பிக்கப்படும் இயேசுவின் தூய்மைமிகு இதயம் திருநாளை நினைவுகூரும் வகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூன் 18 இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியை வழங்கியுள்ளார்.

"கருத்தியலால் கடினமாக்கப்பட்டுள்ள இதயங்களில் ஆண்டவர் நுழைய இயலாது. தன்னையொத்த கனிவும், திறந்த மனப்பான்மையும் கொண்ட உள்ளங்களில், ஆண்டவர்  நுழைகிறார்" என்ற சொற்களை, @pontifex என்ற டுவிட்டர் முகவரியுடன் திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

கடலில் பணியாற்றுவோருக்கு திருத்தந்தையின் நன்றி

மேலும், ஜூன் 17, இப்புதனன்று மாலை, 'கடலின் திருத்தூதுப்பணித்துவம்' என்ற அமைப்பின் வழியே, கடலில் பணியாற்றும் தொழிலாளிகள் மற்றும், அவர்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக பணியாற்றுவோருக்கு காணொளிச் செய்தியொன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

கோவிட் 19 கிருமியால் உருவாகியுள்ள நெருக்கடி வேளையிலும், கடினமான கடல் சார் பணிகளை மேற்கொண்டு, மனித குலத்திற்கு உணவு வழங்கிவரும் தொழிலாளிகள் அனைவருக்கும், திருத்தந்தை, இக்காணொளிச் செய்தியின் துவக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி வேளையில், வழக்கத்திற்கு மாறாக, நீர்ப்பரப்பில் அதிக நேரத்தை கழிக்கவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை பிரிந்திருக்கும் குடும்பத்தினரை தான் நன்றியோடு நினைவில் கொள்வதாக திருத்தந்தை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்கள் தனித்துவிடப்படவில்லை

கடல் நீர்பரப்பில் தங்கியிருக்கும் இத்தொழிலாளர்கள் தனித்துவிடப்படவில்லை என்றும், அவர்களோடு தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகவும், 'கடலின் விண்மீன்' என்ற அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள், மற்றும் 'கடலின் திருத்தூதுப்பணித்துவம்' என்ற அமைப்பின் ஆன்மீக வழிகாட்டிகளாக பணியாற்றும் அருள்பணியாளர்கள் அனைவரும் அவர்களோடு இருப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கடல் சார் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், அவரது தொழில் மற்றும் குடும்பத்தினரை ஆண்டவன் ஆசீர்வதிக்கவேண்டும் என்றும், கடலின் விண்மீனாக விளங்கும் அன்னை மரியா அவர்களை பாதுகாத்து வழிநடத்த வேண்டும் என்றும் வேண்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

'கடலின் திருத்தூதுப்பணித்துவம்'

'கடலின் திருத்தூதுப்பணித்துவம்' என்ற அமைப்பில் தற்போது, 216 ஆன்மீகப் பணியாளர்கள், உலகத்தின் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 311 துறைமுகங்களில் பணியாற்றிவருகின்றனர்.

பன்னாட்டு தொழில் நிறுவனமான ILO, அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகின் பல நாடுகளில் நிலவிய முழுஅடைப்பு காரணமாக, எந்த நாட்டிலும் கால்பதிக்க இயலாமல், கடலிலேயே பல மாதங்களாக தங்கியிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1,50,000த்திலிருந்து 2.00,000 வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

18 June 2020, 14:21