தேடுதல்

Vatican News
திருத்தந்தை புனித 6ம் பவுல், மார்ட்டின் லூத்தர் கிங் திருத்தந்தை புனித 6ம் பவுல், மார்ட்டின் லூத்தர் கிங் 

மார்ட்டின் லூத்தர் கிங் கனவைப் பாராட்டிய திருத்தந்தையர்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு, குடிமக்களுக்குரிய அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்பதை, திருத்தந்தையர் வலியுறுத்தி வந்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு, அந்நாட்டின் குடிமக்களுக்குரிய அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்பதை திருத்தந்தை புனித 6ம் பவுல் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் முடிய அனைத்து திருத்தந்தையரும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

அந்நாட்டில், அனைவருக்கும் சமத்துவம் கிடைப்பதற்கு, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கண்ட கனவும், அவர் வழிநடத்திய வன்முறையற்ற போராட்டங்களும் இன்னும் முழுமையாக பலன் தரவில்லை என்பதை, மே 25ம் தேதி, கொல்லப்பட்ட George Floyd அவர்களின் மரணம் உணர்த்துகிறது.

திருத்தந்தை புனித 6ம் பவுல்

ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் சமத்துவத்திற்காகப் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்களை, 1964ம் ஆண்டு, செப்டம்பர் 18ம் தேதி, வத்திக்கானில் வரவேற்ற திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், அவரது அமைதிவழி போராட்டம் தொடரவேண்டும் என்று மனதார ஊக்கமளித்தார்.

நான்கு ஆண்டுகள் சென்று, 1968ம் ஆண்டு, ஏப்ரல் 4ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கொலையுண்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், "இத்தலைவரின் மரணம், அந்நாட்டில் நிலவும் சமத்துவமின்மையை மேலும் ஆழப்படுத்தாமல், அந்நாட்டு மக்களை ஒருங்கிணைப்பதற்கு வழங்கப்பட்ட உயிர் பலியாக கருதப்படவேண்டும்" என்ற சொற்களை ஒரு செய்தியின் வழியே கூறினார்.

திருத்தந்தை புனித 2ம் ஜான்பால்

ஏறத்தாழ இருபது ஆண்டுகள் சென்று, 1987ம் ஆண்டு, செப்டம்பர் 12ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் New Orleans நகரில், ஆப்ரிக்க அமெரிக்க கத்தோலிக்கர்களைச் சந்தித்த வேளையில், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்களின் கனவைக் குறித்தும், சமத்துவத்திற்காக அவர் மேற்கொண்ட மிகக் கடினமான முயற்சிகள் குறித்தும் பேசினார்.

வன்முறையற்ற வழிகளில் மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள், உலகின் கண்களில் கறுப்பின மக்களின் மாண்பை பறைசாற்றியது என்று, திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

2008ம் ஆண்டு, ஏப்ரல் 16ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வாஷிங்டன் நகரில் பெற்ற வரவேற்பு நிகழ்வின்போது, அடிமைத்தனத்திற்கு எதிராகவும், குடிமக்கள் உரிமை இயக்கத்தை உருவாக்கவும் மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள், உலகில் பல்லாயிரம் மக்களுக்கு உந்துசக்தியாக அமைத்துள்ளன என்று கூறினார்.

மேலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இப்பயணத்தின்போது, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்களின் மகள் Bernice Albertine அவர்களை, நியூ யார்க் நகரில் தனியே சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை பிரான்சிஸ்

2015ம் ஆண்டு, வரலாற்றில் முதல்முறையாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்ற ஒரு திருத்தந்தை அழைப்பு பெற்ற வேளையில், அப்பணியை ஆற்றச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்களின் கனவு, அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்குமே வழிகாட்டியுள்ளது என்று கூறினார்.

மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கொலையுண்டதன் 50ம் ஆண்டு நினைவையொட்டி, 2018ம் ஆண்டு, அத்தலைவரின் மகள், Bernice Albertine அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்து, தனிப்பட்ட முறையில் உரையாடினார்.

இனவெறிக்கு எதிராகவும், இனங்களுக்கிடையே சமத்துவத்தை நிலைநாட்டவும் மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் விட்டுச்சென்ற எண்ணங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு உருவாக்கிய உலக அமைதி நாள் செய்தியில் இணைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

04 June 2020, 14:11