தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

தன்னையே நமக்கு வழங்கும் இறைவனின் வழிகள்

நம் குறைபாடுகள், கண்ணீர், மற்றும், நம் தோல்விகளின் பாதைகள் வழியாகவும் தன்னை நமக்கு வழங்கும் இறைவன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

தன்னையே நமக்கு வழங்குவதற்கு, இறைவன் தேர்ந்தெடுக்கும் வழிகள் குறித்து, ஜூன் 8, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'தன்னையே நமக்கு வழங்குவதற்காக, இறைவன் பலவேளைகளில், நாம் நினைத்துப் பார்க்கமுடியாத வழிகளைத் தேர்வுச் செய்கிறார். சிலவேளைகளில், நம் குறைபாடுகள், கண்ணீர், மற்றும், நம் தோல்விகளின் பாதையையும் அவர் தேர்வுசெய்கிறார் என்பதை, அவர் வழங்கிய பேறுபெற்றோர் கூற்றுகள், நமக்கு கற்றுத்தருகின்றன' என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், ஜூன் 07, இஞ்ஞாயிறன்று, சிறப்பிக்கப்பட்ட தூய்மைமிகு மூவொரு கடவுள் திருவிழாவையும், கோவிட் 19 தொற்றுநோயையும் மையப்படுத்தி, இரு டுவிட்டர் செய்திகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

தன் முதல் டுவிட்டரில், 'இறைவனின் அழகு, நன்மைத்தனம், வற்றாத உண்மை ஆகியவைகளால் நாம் கவரப்பட, தூய்மைமிகு மூவொரு கடவுள் திருவிழா நம்மை அழைக்கிறது. இறைவன் எளிமையானவர், நமக்கு அருகிலிருப்பவர், ஒவ்வொரு மனிதரும் அவரைச் சந்தித்து முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு, மனித உரு எடுத்து வரலாற்றிற்குள் நுழைந்தவர்' என்ற சொற்களைப் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை.

திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், 'கோவிட் 19 தொற்று நோயால் பல நாடுகளில் இன்னும் பலர் இறந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், அந்நாடுகளின் மக்களுடனும், நோயுற்றோருடனும், அவர்களின் குடும்பங்களுடனும், அவர்களுடன் பணியாற்றுவோருடனும் என் நெருக்கத்தை வெளியிடுகிறேன்', எனக் கூறியுள்ளார்.

 

08 June 2020, 13:51