தேடுதல்

Vatican News
அமெரிக்க ஐக்கிய நாட்டில்  எதிர்ப்பு போராட்டங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் எதிர்ப்பு போராட்டங்கள் 

அமெரிக்க ஆயர்களுக்கு ஆறுதலும் ஊக்கமும் வழங்கிய திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் அவர்களை தொலைப்பேசியில் அழைத்து, ஆறுதலும், ஊக்கமும் தரும் வகையில் பேசினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 கொள்ளைநோயிலிருந்து காக்கக்கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வேளையில், அது, எந்த ஒரு நாட்டின், அல்லது, நிறுவனத்தின் உரிமைச் சொத்தாக மாறாமல், அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கவேண்டும் என்று, பல்வேறு உலக அவைகள் வலியுறுத்தி வருவதன் பின்னணியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறிவியல் ஆய்வு, மற்றும், நலப்பராமரிப்பை இணைத்து, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"அறிவியல் திறன்கள், வெளிப்படையான, தனிப்பட்ட ஆதாயங்களைத் தேடாத வழிகளில் ஒருங்கிணைக்கப்படுவது அவசியம். அதன் வழியே, நலப்பராமரிப்பு அனைவரையும் சமமாக அடைவது உறுதி செய்யப்படும்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

மேலும், ஜூன் 3, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை தொலைப்பேசியில் அழைத்து, ஆறுதலும், ஊக்கமும் தரும் வகையில் பேசினார் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் (José H. Gomez) அவர்கள் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்ப்பு போராட்டங்களின்போது, அந்நாட்டு ஆயர்கள், மேய்ப்பர்களுக்குரிய அக்கறையுடன் செயல்பட்டு வருவதற்கும், அறிக்கைகள் வெளியிட்டு வருவதற்கும், திருத்தந்தை, தன் நன்றியை தெரிவித்தார் என்றும், குறிப்பாக, புனித பவுல் மற்றும் மின்னியாபொலிஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Bernard Anthony Hebda அவர்களுடன் திருத்தந்தை தன் அருகாமையை வெளிப்படுத்தினார் என்றும் பேராயர் கோமஸ் அவர்கள் ஏனைய ஆயர்களிடம் தொலைப்பேசி வழியே கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாடு நெருக்கடியான ஒரு சூழலில் இருந்துவரும் வேளையில், தன் மறைக்கல்வி உரையில், தங்கள் நாட்டைக்குறித்து அக்கறையையும் இறைவேண்டுதல்களையும் வெளியிட்டதற்காக, அந்நாட்டு ஆயர்கள் சார்பில், பேராயர் கோமஸ் அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார்.

04 June 2020, 13:23