தேடுதல்

Vatican News
ஈக்குவதோரில் கொரோனா தொற்றுக்கிருமி  ஈக்குவதோரில் கொரோனா தொற்றுக்கிருமி   (AFP or licensors)

திருத்தந்தை: ஈக்குவதோர் நாட்டிற்கு வென்டிலேட்டர்கள்

ஈக்குவதோர் நாட்டில் கொரோனா கிருமியால் தொற்றுகிறவர்கள் மற்றும், இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடவுள் நம் அனைவரையும் குழுமமாகவும், உடன்பிறந்த உறவிலும் வாழ்வதற்காகப் படைத்திருக்கிறார், நாம் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கத்தை, நெருக்கடி காலங்களில் மட்டுமல்லாமல், எல்லாக் காலங்களிலும் நிறைவேற்றுவதில் கவனமாய் இருப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 23, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

இப்போதைய கோவிட்-19 சூழல் குறித்து திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “கடவுள் நம் எல்லாரையும், குழுமமாகவும், உடன்பிறந்த உறவிலும் வாழ்வதற்காகப் படைத்திருக்கிறார், சமுதாயத்தை வழிநடத்தும் கோட்பாடாக,  தனிமனிதக்கொள்கையை அமைத்து, எல்லாவற்றிலும் நம்மையே மையப்படுத்தி வாழ்வது, எக்காலத்தையும்விட இக்காலத்தில் வெறும் ஏமாற்று என்பதை நிரூபித்துள்ளது, கோவிட்-19 அவசரகாலநிலை முடிவுற்றபின், ஏமாற்றும் இந்த மாயையில் வீழ்ந்துவிடாமல் இருப்பதில் நாம் கவனமாய் இருக்கவேண்டும்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.  

ஈக்குவதோர் நாட்டிற்கு வென்டிலேட்டர்கள்

மேலும், கோவிட்-19 கொள்ளைநோயால் உயிரிழப்புகள் அதிகம் இடம்பெறும் ஈக்குவதோர் நாட்டு மருத்துவமனைகளுக்கு, இரண்டு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக அளவில், தற்போதைய கொள்ளைநோயால் அதிக உயிரிழப்புகள் இடம்பெறும் நாடுகளில் ஒன்றான ஈக்குவதோரில், கொரோனா கிருமியால் தொற்றுகிறவர்கள் மற்றும், இறப்பவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரிலுள்ள ஏறத்தாழ ஒரு கோடியே 70 இலட்சம் மக்களில், 47 ஆயிரத்திற்கு அதிகமானோர், கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர் மற்றும், ஏறத்தாழ நான்காயிரம் பேர் இறந்துள்ளனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆயினும் உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். 

நாமவிழா நாளில் மருத்துவக் கருவிகள்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஏப்ரல் 23ம் தேதி, புனித ஜார்ஜ் திருநாளன்று, (திருத்தந்தையின் திருமுழுக்குப் பெயர் ஹோர்கே அதாவது ஜார்ஜ்) தென் இத்தாலியின் லெச்சே மறைமாவட்டத்தின் மருத்துவமனைகளுக்கு 2 வென்டிலேட்டர்கள் மற்றும், தற்காப்பு மருத்துவ கருவிகளை (PPE)  வழங்கினார்.

அதேநாளில், ருமேனியா நாட்டின்  Suceava நகருக்கு 5 சுவாசக் கருவிகள், இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகர் மருத்துவமனைக்கு 3 சுவாசக் கருவிகள், கடந்த ஏப்ரல் 18ம் தேதி சிரியாவிற்கு 10 வென்டிலேட்டர்கள், எருசலேம், புனித யோசேப் மருத்துவமனைக்கு 3 வென்டிலேட்டர்கள், Gaza, பெத்லகேம் ஆகிய நகரங்களுக்கு மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் போன்றவை, திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ளன. 

மேலும், இத்தாலியில் இந்த கொள்ளைநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெர்கமோ நகர் மருத்துவமனைக்கு, கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில், அறுபதாயிரம் யூரோக்களையும், உம்பிரியா மாநிலத்தின் சில வயது முதிர்ந்தோர் இல்லங்களுக்கு மருத்துவக் கருவிகளையும் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தில், உழைப்பின் உயர்வை நிலைநிறுத்தும் ஒரு முயற்சியாக, "தெய்வீக உழைப்பாளி இயேசு" என்ற பெயரில், பத்து இலட்சம் யூரோக்களுடன், ஓர் அறக்கட்டளையையும் உருவாக்கியுள்ளார்.

23 June 2020, 14:33