தேடுதல்

Vatican News
ஜிப்சி குடும்பங்களைச் சந்திக்கச் சென்ற  கர்தினால் பீட்டர் டர்க்சன் ஜிப்சி குடும்பங்களைச் சந்திக்கச் சென்ற கர்தினால் பீட்டர் டர்க்சன்  (Vatican Media)

திருத்தந்தை: துன்புறும் அனைவரையும் ஒருபோதும் மறவாதீர்கள்

உரோம் நகரின் புறநகர் பகுதிகளில் வாழ்கின்ற நாடோடி இன குடும்பங்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக, கொரோனா கொள்ளைநோயின் தற்காப்பு முகக்கவசங்கள் மற்றும், மருந்துகளை வழங்கியுள்ளார், கர்தினால் டர்க்சன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா கொள்ளைநோய் காலத்தில் துன்புறும் அனைவரையும் மறக்கவேண்டாம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 16, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

“துன்புறும் அனைவரையும் ஒருபோதும் மறவாமல், அம்மக்களை நினைவில் கொள்ளவும், அவர்கள் வாழ்வைச் சீரமைக்கவும், மீண்டும் கட்டமைக்கவும் வேண்டும், இவ்வாறு செயல்படுவதில் எல்லாரும் ஒன்றிணையுங்கள் என்று, ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.

ஜிப்சி குடும்பங்களுக்கு முகக்கவசங்கள்

மேலும், உரோம் நகரின் புறநகர் பகுதிகளில் வாழ்கின்ற Romani எனப்படும் நாடோடி  இனத்தவரின் குடும்பங்கள், கோவிட்-19 கொள்ளைநோயிலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்கென, முகக்கவசங்கள் மற்றும், ஏனைய பொருள்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக வழங்கினார், கர்தினால் பீட்டர் டர்க்சன். 

ஜூன் 13, இச்சனிக்கிழமையன்று நாடோடி இனக் குடும்பங்கள் வாழும் பகுதிக்குச் சென்ற, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், வத்திக்கான் மருந்தகம் வழங்கிய, 300 கையுறைகள், 800 முகக்கவசங்கள், 500 காய்ச்சல் மாத்திரைகள் போன்றவற்றை அளித்தார்.

இந்த நாடோடி இன மக்களுக்கு, ஒவ்வொரு வாரமும், 200 முதல் 300 வரையிலான உணவுப் பொட்டலங்களை வழங்கும், அரசு-சாரா தன்னார்வலர் அமைப்பு ஒன்றின் உதவியுடன் கர்தினால் டர்க்சன் அவர்கள், அம்மக்கள் வாழ்கின்ற சேரிகளுக்குச் சென்று, கோவிட்-19 கொள்ளைநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பொருள்களை வழங்கினார்.

இப்போதைய நலவாழ்வு, சமுதாய மற்றும், பொருளாதாரம் தொடர்பான நெருக்கடியில், துன்புறும் மற்றும், புறக்கணிக்கப்பட்ட நிலையை அனுபவிக்கும் அனைவருக்கும் ஆதரவு வழங்குவதற்காக தான் அங்கு வந்துள்ளேன் என்றும், சமுதாயத்தில் எவரும் ஒதுக்கப்படக் கூடாது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறிவருகின்றார் என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

1965ம் ஆண்டில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், உரோமின் புறநகர் பகுதியில் வாழ்கின்ற Romani மக்களைச் சந்தித்தார். இந்த மரபைத் தொடர்ந்து பின்பற்றிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இந்த மக்களை பல சமயங்களில் சந்தித்துள்ளார்.

16 June 2020, 14:14