தேடுதல்

Vatican News
லெஸ்போஸ் தீவிலிருந்து வந்த புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் லெஸ்போஸ் தீவிலிருந்து வந்த புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

துன்புறும் மக்களின் நலனில் அக்கறை காட்டப்பட...

மத்தியக் கிழக்குப் பகுதியின் வருங்காலத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும், ஐக்கிய நாடுகள் நிறுவனம் இணைந்து, இச்செவ்வாயன்று, பிரசல்லஸ் நகரில் கருத்தரங்கு ஒன்றைத் துவங்கியுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிரியா மற்றும், மத்தியக் கிழக்குப் பகுதியின் வருங்காலத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில், ஜூன் 30, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள நான்காவது கருத்தரங்கு, மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என இறைவனை மன்றாடுவோம் என்று, தன் டுவிட்டர் செய்தி வழியே கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்தியக் கிழக்குப் பகுதியின் வருங்காலத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில்,  ஐரோப்பிய ஒன்றியம் மற்றும், ஐக்கிய நாடுகள் நிறுவனம் இணைந்து, இச்செவ்வாயன்று, பிரசல்லஸ் நகரில் துவங்கியுள்ள கருத்தரங்கு பற்றி தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 “சிரியா மற்றும், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியமும், ஐக்கிய நாடுகள் நிறுவனமும் இணைந்து இன்று துவங்கியுள்ள நான்காவது கருத்தரங்கு, உணவு, மருந்துகள், பள்ளிகள், வேலை, போன்றவை தேவைப்படும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று செபிப்போம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தைக்கு வாழ்த்து

மேலும், ஜூன் 29, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை, முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுக்கு, தனது சிறப்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு, இப்பெருவிழாவை மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கியபின்னர், தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் இருவரின் சந்திப்பு, விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கையில், எனது அன்புநிறை சகோதரரான முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்களை ஆன்மீக முறையில் வாழ்த்துகிறேன் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று, கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தையின் பிரதிநிதிகள் குழு ஒன்று உரோம் நகருக்கு வருகைதருவது பாரம்பரியாக இடம்பெறும் ஒரு நிகழ்வு என்பதையும் எடுத்துரைத்தார்.

தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, இந்நிகழ்வு இடம்பெறவில்லை என்றுரைத்த திருத்தந்தை, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவைச் சிறப்பிக்கும் இந்நாளில், உரோம் மண்ணில், குறிப்பாக நீரோ பேரரசன் காலத்தில் தலைவெட்டப்பட்டும், உயிரோடு எரிக்கப்பட்டும், கொல்லப்பட்டும் இறந்த ஏராளமான மறைசாட்சிகளை நினைவுகூர விரும்புகிறேன் என்று கூறினார்.  

30 June 2020, 12:10