தேடுதல்

Vatican News
கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா 

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா திருப்பலி

பெல்ஜியம் நாட்டில், புனித Juliana de Cornillon அவர்கள் அடைந்த ஆழ்நிலை இறையனுபவத்தைத் தொடர்ந்து, 1247ம் ஆண்டில், அந்நாட்டின் Liège நகரில் கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா முதன்முதலில் சிறப்பிக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தொடர்ந்து இடம்பெறும் வன்முறையிலிருந்து தப்பித்துச்செல்வதற்கு, இறைவேண்டல் மற்றும், தன்னையே வழங்குதல் வழியாக, கிறிஸ்தவர்கள் உதவமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 09, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

வத்திக்கான் பெருங்கோவிலில் பெருவிழாத் திருப்பலி

ஜூன் 14, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழாத் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருப்பலியில், கோவிட்-19 விதிமுறைகளின்படி, ஏறத்தாழ ஐம்பது விசுவாசிகள் பங்குகொள்வார்கள் என்றும், இத்திருப்பலியின் இறுதியில், திருநற்கருணை ஆராதனையும், ஆசீரும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஞாயிறு, உரோம் நேரம் காலை 9.45 மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம் பகல் 1.15 மணிக்கு, இந்தப் பெருவிழா திருப்பலியைத் தொடங்குவார் என்றும், இத்திருப்பலி, சமுதாய ஊடகங்கள் வழியாக, வத்திக்கான் ஊடகத்துறையால் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையோடு பெருவிழா

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது தலைமைப்பணியை ஏற்ற 2013ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு வரை, இப்பெருவிழாத் திருப்பலியை, உரோம் புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவில் வளாகத்தில் நிறைவேற்றி, அதைத் தொடர்ந்து நடைபெற்ற திருநற்கருணை பவனியை புனித மேரி மேஜர் பெருங்கோவில்வரை வழிநடத்திச்சென்று, இறுதியில், திருநற்கருணை ஆசீரும் வழங்கினார்.

பின்னர், 2018ம் ஆண்டு, கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாத் திருப்பலியை, உரோம் நகருக்கு அருகிலுள்ள ஓஸ்தியா என்ற ஊரில் புனித மோனிக்கா பங்குத்தளத்திலும், 2019ம் ஆண்டு உரோம் புறநகர்ப் பகுதியிலுள்ள Casal Bertone என்ற பகுதியிலும் நிறைவேற்றினார், திருத்தந்தை.

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாவின் ஆரம்பம்

பெல்ஜியம் நாட்டில், புனித Juliana de Cornillon அவர்கள் அடைந்த, ஆழ்நிலை இறையனுபவத்தைத் தொடர்ந்து, 1247ம் ஆண்டில், அந்நாட்டின் Liège நகரில் கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா, முதன்முதலில் சிறப்பிக்கப்படத் தொடங்கியது.

அதற்கு பல ஆண்டுகள் சென்று, 1263ம் ஆண்டில், Bohemiaவைச் (செக் குடியரசு) சேர்ந்த ஓர் அருள்பணியாளர், திருநற்கருணையில் இயேசு உண்மையிலேயே பிரசன்னமாக இருக்கிறாரா என்ற சந்தேகத்துடன் இத்தாலிக்கு திருப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவர், இத்தாலியின் பொல்சேனா என்ற நகரில் திருப்பலி நிறைவேற்றியபோது, திருஅப்பம் உடைந்து சதையாக மாறியது மற்றும், அதிலிருந்து இரத்தமும் வடிந்தது. இந்த புதுமைக்குப்பின், 1264ம் ஆண்டில் திருத்தந்தை 4ம் உர்பான் அவர்கள், இந்தப் பெருவிழா, திருஅவை  முழுவதிலும் சிறப்பிக்கப்படுமாறு பணித்தார்     

திருஅவையில் கோட்பாடு

திருநற்கருணையில் இயேசு உண்மையிலேயே பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை, 1215ம் ஆண்டில் நான்காவது இலாத்தரன் சங்கம் உறுதிசெய்தது. பின்னர், 1551ம் ஆண்டில், அதனை திரிதெந்து பொதுச்சங்கம் மீண்டும் உறுதிசெய்தது.

09 June 2020, 13:13