தேடுதல்

Vatican News
ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல் ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல் 

குழித்துறை மறைமாவட்ட ஆயரின் பணி ஓய்வு ஏற்பு

குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக, 2015ம் ஆண்டில் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்கள், 1951ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி, கோட்டாறு மறைமாவட்டத்திலுள்ள Paduvoor என்ற ஊரில் பிறந்தவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“தூய ஆவியார் நம்மை அன்புகூர்கிறார் மற்றும், அவர் நம் ஒவ்வொருவரின் இடத்தையும் அறிந்திருக்கிறார், அவருக்கு நாம், காற்றால் அடித்துச்செல்லப்படும் வண்ணத்தாள் துண்டுகள் அல்ல, மாறாக, அவரது வண்ணஓவியத்தில், ஈடுசெய்யமுடியாத சிறு துண்டுகள்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 06, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.  

மே 31, கடந்த ஞாயிறன்று, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைச் சிறப்பித்த நாம், ஜூன் 07, இஞ்ஞாயிறன்று தூய்மைமிகு மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடவுள்ளவேளை, திருத்தந்தை கடந்த சில நாள்களாக, தன் டுவிட்டர் செய்திகளில், தூய ஆவியார் நம் வாழ்வில் ஆற்றும் வல்லசெயல்கள் பற்றியக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார். 

ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல்

மேலும், தமிழகத்தின் குழித்துறை மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்கள் சமர்ப்பித்த பணி ஓய்வு விண்ணப்பத்தை, ஜூன் 06, இச்சனிக்கிழமையன்று ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சலேசிய சபையைச் சார்ந்த ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக, 2014ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார். இவர், 1951ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி, கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த Paduvoor என்ற ஊரில் பிறந்தவர். 

இவர், கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக, 2015ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, கோட்டாறு மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்.   

மேலும், ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்களையும், ஜெனோவா உயர்மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் Angelo Bagnasco அவர்களையும், இஸ்பெயின் நாட்டின் மன்ரேசா நகர் மேயர் Valenti Junyent Torras அவர்களையும், ஜூன் 06, இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கானில், தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

06 June 2020, 12:32