தேடுதல்

Vatican News
திருமுழுக்கு யோவானுக்கு பெயரிடும் காட்சி திருமுழுக்கு யோவானுக்கு பெயரிடும் காட்சி 

புனித திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள் - டுவிட்டர்

"வயதில் முதிர்ந்த பெற்றோரிடமிருந்து திருமுழுக்கு யோவான் பிறந்தது, கடவுள், மனித அறிவையும், சக்தியையும் கடந்தவர் என்பதைச் சொல்லித்தருகிறது." – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 24 இப்புதனன்று, புனித திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், இப்புனிதரைக் குறித்து, ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

புனித திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வேளையில், நற்செய்தியை எடுத்துரைக்கும் துணிவை, இப்புனிதரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நம்மிடையே உள்ள வேற்றுமைகளின் நடுவே, ஒருங்கிணைப்பையும், நட்பையும் வளர்ப்பதன் வழியே, நம் நற்செய்தி அறிவிப்பு, இன்னும் நம்பத்தகுந்ததாக மாறும் என்றும், திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மேலும், இத்திருநாளையொட்டி திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "வயதில் முதிர்ந்த பெற்றோரிடமிருந்து திருமுழுக்கு யோவான் பிறந்தது, கடவுள், மனித அறிவையும், சக்தியையும் கடந்தவர் என்பதைச் சொல்லித்தருகிறது. இறைவனின் மறையுண்மைக்கு முன், பணிவுடன் அமைதி காக்கவும், அவரை நம்பவும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்" என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

மேலும், ஜூன் 24ம் தேதி, புனித திருமுழுக்கு யோவானின் பிறந்த நாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், உரோம் நகரில் உள்ள புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில், ஒரு சிறப்புத் திருப்பலியை, கர்தினால் அஞ்சேலோ தே தொனாத்திஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

உரோம் மறைமாவட்ட ஆயரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக இம்மறைமாவட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள கர்தினால் தே தொனாத்திஸ் அவர்கள், இம்மறைமாவட்டத்தில், அருள்பணியாளர்களாக 25, 50 மற்றும் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அருள்பணியாளர்களுடன் இணைந்து, இந்த நன்றித் திருப்பலியை நிறைவேற்றினார்.

அத்துடன், இம்மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி வழிகாட்டியையும், கர்தினால் தே தொனாத்திஸ் அவர்கள், இவ்வேளையில் வெளியிட்டார்.

24 June 2020, 14:28