தேடுதல்

Vatican News
பெந்தகோஸ்து திருவிழா திருப்பலியில் -310520 பெந்தகோஸ்து திருவிழா திருப்பலியில் -310520  (ANSA)

நாம் அனைவரும் ஒரே குடும்பமாக விளங்கும்படியாக...

திருத்தந்தை : இறைவன் நமக்கு கொடையாக வழங்கியுள்ளதுபோல், நாமும் பிறருக்கு ஒரு கொடையாக மாறவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

சுயநலம் எனும் முடக்குவாதத்திலிருந்து நம்மை விடுவிக்கவும், மற்றவர்களுக்கு நன்மை புரிவதிலும், பணியாற்றுவதிலும் நம்மையே கொடையாக வழங்கவும் உதவுமாறு தூய ஆவியாரை நோக்கி வேண்டுவோம் என பெந்தகோஸ்து திருவிழா திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 31, பெந்தகொஸ்து விழாவாகிய இஞ்ஞாயிறன்று, கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியின் காரணமாக மிகச்சிறிய அளவிலேயே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு, புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் ஒரே குடும்பமாக விளங்கும்படியாக, ஒருவருக்கொருவர் அன்புகூர்ந்து பணியாற்றி, ஒன்றிப்பை கட்டியெழுப்ப உதவுமாறு தூய ஆவியாரை வேண்டுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

அன்னை மரியா மற்றும் சீடர்களின் மீது எருசலேமில் தூயஆவியார் இறங்கி வந்தது குறித்து திருத்தூதர் பணிகள் நூலில் நாம் காண்பது (தி.ப. 2:1-11), திருஅவையின் பிறப்பாக நோக்கப்படுகின்றது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆதிகாலத் திருஅவையில் வெவ்வேறு பின்னணிகளையும் இனங்களையும் சேர்ந்தவர்களாக அதன் உறுப்பினர்கள் இருந்தபோதிலும், அவர்கள் அனைவரையும் திருஅவையின் குழந்தைகளாக மாற்றி, ஒன்றிப்பைக் கொணர்ந்தவர் தூய ஆவியார் என கூறினார்.

இன்றைய நம் காலத்திலும் நமக்குள் பல்வேறு வேறுபாடுகளும், கருத்துக்களும், சிந்தனைகளும்,  விருப்பங்களும் உள்ளன, ஆனால், நாம் நினைப்பதுதான் அனைவருக்கும் நல்லது என்ற தவறான எண்ணத்துடன் செயல்படுவது, தூய ஆவியார் காட்டும் வழியல்ல, மாறாக நம்  விருப்பத்திற்கு ஏற்றதுபோல் நம்மால் உருவாக்கப்படும் ஒரு விசுவாசம் என, தன் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் அன்புநிறை குழந்தைகளாக ஒன்றிப்பில் செயல்படுவது குறித்தும், நற்செய்தி அறிவிக்கும் கடமை குறித்தும், ஒவ்வொருவரும் தங்களையே கொடையாக வழங்கவேண்டிய தேவை குறித்தும் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, தாங்கள் பெற்றதை, மற்றவர்களுடன் பகிர்ந்ததன் வழியாகவே சீடர்களின் பயணம் தொடர்ந்தது எனவும் கூறினார்.

இறைவன் நமக்கு கொடையாக வழங்கியுள்ளதுபோல், நாமும் பிறருக்கு ஒரு கொடையாக மாறவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மையே நாம் கையளிப்பதில் தடையாக இருக்கும் மூன்று எதிரிகளைக் குறித்து கவனமாகச் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்து, நம்பிக்கைக் குறைபாடின்றி முன்னோக்கிச் செல்வோம் எனவும் கேட்டுக்கொண்டார்.

01 June 2020, 13:28