தேடுதல்

Vatican News
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மெக்சிகோவின் தென்பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மெக்சிகோவின் தென்பகுதி   (ANSA)

மெக்சிகோ நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்காக செபம்

மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர், மற்றும், காயமுற்றோர், குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஜூன் 23ம் தேதி, இச்செவ்வாயன்று, மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கம் குறித்து, தன் புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதனால் உயிரிழந்தோர், மற்றும், காயமுற்றோர், குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.
பெரும் இழப்புகளை சந்தித்துள்ளோர், காயமுற்றோர், மற்றும், உயிரிழந்தவர்களுக்காக செபிப்போம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, பல்வேறு வகைகளில் இழப்புக்களைச் சந்தித்துவரும் இம்மக்களுக்கு, இறை உதவியும், சகோதர சகோதரர்களின் உதவியும், சக்தியையும், ஆதரவையும், வழங்குவதாக எனவும் கூறினார்.
தென் அமெரிக்க பகுதியின் அன்பு சகோதரர், சகோதரிகளே, நான் என்றும் உங்களருகில் இருக்கிறேன் என்ற உறுதி மொழியையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தன் புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில், ஜூன் 24, இப்புதனன்று,, புனித திருமுழுக்கு யோவானின் பிறப்புத் திருவிழா சிறப்பிக்கப்பட்டதை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெசியாவின் முன்னோடியான இவ்விறைவாக்கினரின் எடுத்துக்காட்டு நமக்கு உதவுவதாக என்று கூறினார்.
திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டும், மன்னர் தாவீதின் எடுத்துக்காட்டும், நம் வாழ்வுக்கு ஊக்கத்தை தருவதாக. உண்மை கடவுள் எங்குள்ளார் என்பதை, இவர்கள் நமக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நாமும், செபத்தின் வழியாக இறைவனின் நட்பைப் பெறுவதுடன், கடவுளை மனிதர்களிடம் கொண்டுசெல்லவும், மனிதர்களை, கடவுளிடம் கொண்டுவரவும், நம் எடுத்துக்காட்டுக்கள் வழியாக உதவுமோமாக, என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
 

24 June 2020, 14:46