தேடுதல்

Vatican News
போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டு கல்லறைகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டு கல்லறைகள்  (ANSA)

ஏமன், உக்ரைன் நாடுகளில் துன்புறுவோருக்காக செபம்

2015ம் ஆண்டிலிருந்து இடம்பெற்றுவரும் போரினால் துன்புற்றுவரும் ஏமன் நாட்டில், கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கமும் இருப்பதால், இலட்சக்கணக்கான சிறார் பசிக்கொடுமையை அனுபவிக்கக்கூடும் - யூனிசெப்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேலும், ஜூன் 28, இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவேளை செப உரை வழங்கிய பின்னர், போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டு மக்களோடும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதி மக்களோடும், தன் அருகாமையைத் தெரிவித்தார்.

இவ்விரு நாடுகளின் மக்களுக்காகச் செபிக்குமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏமன் நாட்டு மக்கள், குறிப்பாக சிறார், கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளால் துன்புறுகின்றனர் என்று கூறினார்.

ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போரினால் தொடர்ந்து துன்புற்றுவரும் ஏமன் நாட்டில், கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கமும் இருப்பதால், இலட்சக்கணக்கான சிறார் பசிக்கொடுமையை அனுபவிக்கக்கூடும் என்று, ஐ.நா.வின் குழந்தைநல நிதி அமைப்பான யூனிசெப் எச்சரித்துள்ளது.

ஏமனில், இவ்வாண்டு முடிவதற்குள் 24 இலட்சம் சிறார், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொள்வர் என்றும், இந்த எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையவிட 20 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்றும், யூனிசெப் கூறியுள்ளது.

உக்ரைனில் வெள்ளம்

கனத்த பருவமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டு மக்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாட்டினர், ஆண்டவர் அளிக்கும் ஆறுதலையும், பராமரிப்பையும் அனுபவிப்பார்களாக என்றும் கடவுளை இறைஞ்சினார்.

28 June 2020, 13:10