தேடுதல்

Vatican News
அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர் வழிபாட்டுமுறை அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர் வழிபாட்டுமுறை   (Agenzia Romano Siciliani)

அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர் இரக்கத்தின் பெண்களாக செயலாற்ற...

திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களின் அனுமதியுடன், 1970ம் ஆண்டில், அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர் வழிபாட்டுமுறையின் திருத்தியமைக்கப்பட்ட ஆவணம் வெளியிடப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தங்களது கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணித்து வாழும் பெண்கள் அனைவரும், துன்புறும் மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கவும், அவர்களை கிறிஸ்துவிடம் அழைத்துவர உழைக்கவும் வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

கன்னியர், தங்கள் வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் வழிபாட்டுமுறையின் திருத்தியமைக்கப்பட்ட ஆவணம் வெளியிடப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டின் நிறைவாக, ஜூன் 01, இத்திங்களன்று, அர்ப்பண வாழ்வு வாழ்கின்ற கன்னியர் அனைவருக்கும் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கன்னியர், மனித சமுதாயத்தில் இரக்கத்தின் பெண்களாக, சிறப்பாகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

நம்மைச் சுற்றி நிகழும் அனைத்தும் உங்களைத் தொந்தரவு செய்கின்றது, அவற்றிற்கு உங்கள் கண்களை மூடிக்கொண்டிராமலும், அவற்றினின்று தப்பித்துச்செல்லாமலும் இருங்கள் என்று, அந்தக் கன்னியரை வலியுறுத்திய திருத்தந்தை, அனைவருக்கும் வாழ்வின் முழுமையை வழங்கும் நற்செய்தியை அறிவிப்பதில் உறுதியாய் இருக்கவும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஐம்பதாம் ஆண்டின் நினைவாக, துறவியர் பேராயம் ஏற்பாடு செய்திருந்த, அர்ப்பணிக்கப்பட்ட கன்னியரின் உலகளாவிய மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த ஆவணம் வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இக்கன்னியரைச் சந்தித்து. இவர்கள் திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள இரட்டிப்புக் கொடைகள் என்று கூறியதை எடுத்துரைத்தார்.

நகரங்களில் நிலவும் தனிமையைக் குறைப்பதற்கு, உண்மையான உறவுகளை உருவாக்குமாறும், அதிகாரங்களில் நிலவும் உரிமைமீறல்களைத் தடுத்துநிறுத்துவதற்கு, ஞானம், பிறரன்பு, துன்பங்களை மேற்கொள்ள சக்தி போன்றவற்றைக் கொண்டிருக்குமாறும் திருத்தந்தை கூறினார்.

இத்தகைய ஒரு வாழ்வுமுறை, சொந்த திறமைகளால் அல்ல, மாறாக, கடவுளின் இரக்கத்தால் வழங்கப்பட்டதாகும் என்றும், இக்கன்னியர், கிறிஸ்துவின் மணமகளாம் திருஅவையின் முகத்தைப் பிரதிபலிப்பவர்களாக, தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், திருத்தந்தை ஊக்கப்படுத்தியுள்ளார்.

அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள் என்பவர்கள், திருமணமாகாமல், தங்களின் கன்னிமையை நிரந்தரமாக கடவுளுக்கு அர்ப்பணித்து வாழ்பவர்கள். இன்று உலகில் ஐயாயிரத்திற்கும் அதிகமான, அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர் உள்ளனர் என்று, துறவியர் பேராயத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களின் அனுமதியுடன், 1970ம் ஆண்டில், அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர் வழிபாட்டுமுறையின் திருத்தியமைக்கப்பட்ட ஆவணம் வெளியிடப்பட்டது. 

02 June 2020, 13:54