தேடுதல்

Vatican News
"Lazare" அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் "Lazare" அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  

“Lazare” அமைப்பின் 10 ஆண்டுகால பணிக்கு பாராட்டு

பாரிஸ் நகரைச் சேர்ந்த, Étienne Villemain, Martin Choutet ஆகிய இருவரும், தெருவில் வாழ்வோருடன் வாழத் தீர்மானித்து, 2011ம் ஆண்டில், Lazare என்ற அமைப்பை உருவாக்கினர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரான்ஸ் நாட்டு "Lazare" என்ற அமைப்பு தொடங்கப்பட்டதன் பத்தாம் ஆண்டையொட்டி, அதன் பிரதிநிதிகளை, வத்திக்கானில் அமைந்துள்ள சாந்தா மார்த்தா இல்லத்தில் மே 29, வெள்ளியன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதரின் மாண்பு, மன்னிப்பு, உண்மையான செல்வம் போன்ற தலைப்புக்களில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கேள்வி பதிலாக அமைந்த இந்த சந்திப்பில், ஒருவரின் மனித மாண்பு, குறிப்பாக, மனநலம் பாதிக்கப்பட்டவரின் மாண்புபற்றி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, ஒருவர் சிறந்த விளையாட்டு வீரராக இருக்கலாம், உறுதியான உடல்நலத்தைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவரிடம் மனித மாண்பு இல்லையெனில், அவர் மதிப்பற்றவராக மாறுகிறார், எனவே, நன்றாக வாழ்வதற்கு, மாண்பு முக்கியமான நிபந்தனை என்று கூறினார்.

செல்வந்தரோ, ஏழையோ, நோயாளியோ, நலமாக இருப்பவரோ, யாராக இருந்தாலும், கடவுள் மற்றும், பிறர் முன்னிலையில், மாண்பே, வாழும்முறையாக உள்ளது என்று கூறிய திருத்தந்தை, ஒருவருக்கு மாண்பு, உள்ளார்ந்த வலிமையைக் கொடுக்கிறது என்று கூறினார்.

மன்னிப்பு

மன்னிப்பு, சான்றுபகர்தல், திருஅவையின் சொத்து போன்ற தலைப்புக்களிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை, மன்னிப்பதும், மன்னிக்கப்படுவதும், மீண்டுவருவதற்குத் தேவையான பயணச்சீட்டு (return ticket) போன்றது என்றும், இதயம் குணமாகும்வரை, அமைதி மற்றும், மனத்தாழ்மையோடு மன்னிப்பின் பாதையில் நடக்கவேண்டியது மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.

இதற்கு மாறாக, காழ்ப்புணர்வும், கடுங்கோபமும் மோசமான சொத்துக்கள், இவை எவரையும் ஒருபோதும் வளப்படுத்தாது என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவ சான்றுபகரும் வாழ்வின் அவசியம் குறித்தும், அக்குழுவினரிடம் எடுத்துரைத்தார்.

சான்று வாழ்வு

1916ம் ஆண்டில் அல்ஜீரியாவில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட Charles de Foucauld அவர்கள் வாழ்வை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு, அவர் விரைவில் புனிதர் என அறிவிக்கப்படவுள்ளார் என்பதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

திருஅவையின் சொத்து

உலகில் பலர் ஏழைகளாக இருக்கையில், திருஅவை ஏன் இவ்வளவு செல்வம் மிக்கதாய் உள்ளது என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை என்ற சொல் மிகவும் பொதுப்படையானது என்றும், செல்வத்தையும், பணத்தையும் கொண்டிருக்கும் ஒருவர், கடவுளைவிட்டு விலகிச்செல்கிறார், அவரது இதயம் பணத்தில் பற்றுக்கொண்டுள்ளது, அவர் கடவுளுக்கு எவ்வளவு நெருக்கமாக வருகிறாரோ அவ்வளவுக்கு அவர் ஏழையாக மாறுகிறார் என்றும் விளக்கினார்.  

அதேநேரம், நற்செய்திகூறும் ஏழையரின் உள்ளத்தோடு செல்வத்தை நிர்வகிக்கும் செல்வந்தர்களும் உள்ளனர் என்றும், ஒரு திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர் அல்லது துறவி செல்வந்தராக இருக்கையில், அது, திருஅவைக்கு அவமானமாக உள்ளது என்றும் கூறிய திருத்தந்தை, இயேசுவை நெருக்கமாகப் பின்செல்ல அழைக்கப்படுபவர்கள், அனைத்து செல்வத்தினின்றும் வெகுதூரம் விலகி இருக்கவேண்டும் மற்றும், ஏழையரின் இதயத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

வத்திக்கானில் Lazare அமைப்பு திறக்கப்படும் வாய்ப்பு பற்றிக் கேட்டபோது, இடப்பற்றாக்குறை அல்ல, மாறாக, திருத்தந்தையின் துணிவு குறைவுபடுவதே காரணம் என்று கூறிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நாம் பெற்றுள்ள மனத்தாராளம் மற்றும், அன்புக்கு எவ்வாறு பதிலளிக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். 

கோவிட்-19 விதிமுறைகளால், "Lazare" அமைப்பின் எட்டு பிரிதிநிதிகளை மட்டுமே சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாரிஸ் நகரைச் சேர்ந்த, Étienne Villemain, Martin Choutet ஆகிய இருவரும், தெருவில் வாழ்வோருடன் வாழத் தீர்மானித்து, 2011ம் ஆண்டில், Lazare என்ற அமைப்பை உருவாக்கினர். அன்றிலிருந்து அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள், தங்கள் வீடுகளை, வீடற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 

ஒவ்வொரு குடியிருப்பிலும், ஆறு முதல் பத்துப் பேர், தன்னார்வலர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இன்று பாரிஸ் நகரில் 12 வீடுகளில் ஏறத்தாழ 200 பேர் வாழ்ந்து வருகின்றனர். வீடற்றவர்களுக்கு, வீடுகள் இருப்பதைவிட அவர்களுக்கு மனித உறவுகள் தேவைப்படுகின்றன என்பதை உணர்ந்த இவ்வமைப்பினர், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்கள்மீது அக்கறைகாட்டி வருகின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது. 

06 June 2020, 12:55