தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை  210620 மூவேளை செப உரை 210620  (Vatican Media)

அஞ்சவேண்டாம், இறைத்தந்தை நம்மைப் பராமரிக்கிறார்

கிறிஸ்துவின் சீடர்கள் சிலநேரங்களில், கடவுளே தங்களைக் கைவிட்டதுபோன்று உணரலாம், அச்சூழலிலும்கூட, வாழ்வு கடவுளின் கரங்களில் உள்ளது என்பதை அறிந்து, அஞ்சாமல் இருக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பகைமை, அடக்குமுறை மற்றும், கடவுளால் கைவிடப்பட்டதாக உணரும்போதும்கூட, கிறிஸ்துவின் சீடர்கள் அஞ்சத் தேவையில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று கூறினார்.

ஜூன் 21, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, நற்செய்தி வாசகத்தை (மத்.10,26-33), மையப்படுத்தி, மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவைப் பின்செல்வோர், தங்கள் வாழ்வில், அனுபவத்தில் உணரக்கூடிய மூன்று சூழல்களில், அஞ்சாமல் இருக்கவேண்டும் என இயேசு தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார் என்று கூறினார்.  

பகைமை

இறைவார்த்தையை உள்ளபடியே அறிவிப்பதற்குப் பதில், அதை இனிப்பில் தோய்த்து அறிவிப்பதால், உண்மையில் அதை அறிவிப்பவருக்கு எதிராக செயல்படுவோரைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, இறைவார்த்தையை, திறந்தமனதுடனும், பொதுவிலும் அறிவிக்குமாறு இயேசு தம் சீடர்களை ஊக்கப்படுத்துகிறார் என்று கூறினார்.

அடக்குமுறை

தம் சீடர்கள், வன்முறை அடக்குமுறைகளை நேரிடையாக எதிர்கொள்வர் என்ற எச்சரிக்கையை விடுக்கும் இயேசுவின் கூற்று, எல்லாக் காலங்களிலும் உண்மையாகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இன்றும், உலகெங்கும், பல கிறிஸ்தவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாகின்றனர் என்று கூறினார்.

இவர்கள், நற்செய்திக்காகவும், அன்புக்காகவும் துன்புறுகிறார்கள் என்றால், இவர்கள் நம் காலத்தின் மறைசாட்சிகள் என்றும், ஆணவம் மற்றும் வன்முறையால் நற்செய்தி அறிவிக்கும் சக்தியை அடக்கும் வழிகளைத் தேடுவோர் குறித்து அஞ்சத் தேவையில்லை என்று கூறியத் திருத்தந்தை, சீடர்கள், எதற்கு மட்டும் அஞ்சவேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.

கடவுளின் கரங்களில்

இறைவனின் கொடையை இழப்பதற்கும், நற்செய்தியின்படி வாழ்வதை நிறுத்துவதற்கும், பாவத்தின் விளைவாக, நன்னெறி வாழ்வின் மரணத்திற்கும் இயேசுவின் சீடர்கள் அஞ்சவேண்டும் என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவின் சீடர்கள் சிலநேரங்களில் கடவுளே தங்களைக் கைவிட்டதுபோன்று உணரலாம், அச்சூழலிலும்கூட, வாழ்வு கடவுளின் கரங்களில் உள்ளது என்பதை அறிந்து, அஞ்சாமல் இருக்கவேண்டும் என்று கூறினார்.  

கடவுள் தங்களை அன்புகூர்கிறார், அவர் நம்மைப் பராமரிக்கிறார், ஏனெனில் அவர் கண்களில் நம் மதிப்பு மேலானது என்றுரைத்த திருத்தந்தை, நம் விசுவாசச் சான்றுவாழ்வு, ஒளிவுமறைவின்றி இருப்பதே முக்கியம், இதுவே விண்ணில் அவரோடு இருப்பதற்கும், மீட்பிற்கும் வரையறை என்று கூறினார்.

தீமையைவிட கடவுளின் அருளே எப்போதும் அதிக வல்லமைமிக்கது என்று மூவேளை செப உரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவிடம் செபித்து, தன் உரையை நிறைவு செய்தார்.

21 June 2020, 12:40