தேடுதல்

Vatican News
லிபியாவில்  புலம்பெயர்ந்தோர் லிபியாவில் புலம்பெயர்ந்தோர் 

திருத்தந்தை - லிபியாவில் அமைதி நிலவ அழைப்பு

லிபியாவிலுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், புகலிடம் தேடுவோர், நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்தோர் ஆகிய அனைவருக்காகவும் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வன்முறை மற்றும், ஆயுதமோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா நாட்டில் அமைதி நிலவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, உலகளாவிய சமுதாயத்திற்கு இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழாவாகிய ஜூன் 14, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின், லிபியா நாட்டில் அமைதி நிலவ அழைப்பு விடுத்தார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

லிபியா நாட்டின் தற்போதைய துன்பநிலையை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருவதாக உரைத்த திருத்தந்தை, அரசியல் மற்றும் இராணுவத்திற்குப் பொறுப்பான உலகளாவிய சமுதாயம், லிபியாவில் இடம்பெறும் வன்முறைக்கு முடிவு காணவும், அமைதி, நிலையானதன்மை மற்றும், ஒன்றிப்பு நிலவும் வழிகளை நம்பிக்கையுடன் தேடவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

லிபியாவிலுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், புகலிடம் தேடுவோர், நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்தோர் ஆகிய அனைவருக்காகவும் செபித்த திருத்தந்தை, அந்நாட்டின் தற்போதைய நிலை, ஏற்கனவே நிச்சயமில்லாத நிலைகளை எதிர்கொள்ளும் இந்த மக்களின் துன்பங்களை, மேலும் அதிகரிக்கும், இந்நிலை கொடூரமானது என்றும் கூறினார்.

இந்த மக்களின் நெருக்கடிநிலையை உணர்ந்து, அவர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு, மாண்பு நிறைந்த சூழல் மற்றும், நம்பிக்கை நிறைந்த வருங்காலத்தை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்று உலகளாவிய சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்தப் பொறுப்பிலிருந்து எவரும் தன்னை விலக்கிக்கொள்ள நினைக்கக் கூடாது, இதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளாகத்தில் கூடியிருந்த அனைவரும், லிபியாவுக்காக சிறிதுநேரம் அமைதியாகச் செபிக்குமாறு கூறி, தானும் செபித்தார்.

14 June 2020, 13:00