தேடுதல்

Vatican News
சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறார் சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்  (ANSA)

போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதி நிலவ ஆதரவு

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதியிலிருந்து நடைபெற்றுவரும் போரில், 3,60,000த்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், பல நகரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன, மற்றும் பலர், அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக போர் இடம்பெற்றுவரும் சிரியாவில், எப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது மக்கள் பசிப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர் என்று ஐ.நா. நிறுவனம் எச்சரித்துள்ளவேளை, மத்தியக் கிழக்குப் பகுதியில் துன்புறும் மக்களுக்கு ஆதரவாக நிதியுதவிகள் வழங்கப்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூன் 28, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய பின்னர் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா மற்றும், மத்திய கிழக்குப் பகுதிக்கு ஆதரவு வழங்குவது குறித்து, Brussels நகரில் நடைபெறவிருக்கும் நான்காவது கருத்தரங்கில், நாடுகள் நிதியுதவிக்கு உறுதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  

ஜூன் 30, வருகிற செவ்வாயன்று, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும், ஐ.நா. நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முக்கியமான கருத்தரங்கு, சிரியா நாட்டு மக்களின் பெருந்துன்பநிலைகளையும், அதற்கு அண்டை நாடுகள், குறிப்பாக, லெபனான் நாடு எதிர்கொள்ளும் கடுமையான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளையும் களைய உதவுவதற்கு, இறைவனை மன்றாடுவோம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 இந்நாடுகளில் எண்ணற்ற சிறார் பசியினால் துன்புறுகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, நாடுகளின் தலைவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ உழைக்குமாறு வலியுறுத்தினார்.

சிரியாவில் கோவிட்-19

சிரியாவில் கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கம் குறைவாக இருந்தாலும், அந்நாட்டில், பத்திற்கு ஒன்பது பேர், ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவான ஊதியத்திலே வாழ்ந்து வருகின்றனர். 

மேலும், ஒவ்வோர் ஆண்டும் 83 நாடுகளில் ஏறத்தாழ பத்து கோடி மக்களுக்கு உதவிவரும் ஐ.நா.வின் உணவு உதவி திட்ட அமைப்பின் (WFP) அறிக்கையின்படி, சிரியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், அதாவது 93 இலட்சம் மக்கள், கடும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதியிலிருந்து நடைபெற்றுவரும் போரில்,

3,60,000த்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், பல நகரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன, மற்றும் பலர், அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.

28 June 2020, 12:57