தேடுதல்

Vatican News
ஏதென்சில் புலம்பெயர்ந்தோர் உலக நாளில்  பேரணி ஏதென்சில் புலம்பெயர்ந்தோர் உலக நாளில் பேரணி  (AFP or licensors)

புலம்பெயர்ந்தோரை, படைப்பைப் பாதுகாக்க திருத்தந்தை அழைப்பு

16ம் நூற்றாண்டில் உரோம் நகரில் கொள்ளைநோயில் பலியானவர்களுக்குப் பணியாற்றியதால் உயிரிழந்த புனித அலாய்சியஸ், கடவுள் மற்றும், அயலவர் மீது அளவுகடந்த அன்புகொண்டிருந்த இளைஞர் - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா கொள்ளைநோய், புலம்பெயர்ந்தோரையும், நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாக்கவும், நமது விழிப்புணர்வை அதிகரித்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று கூறினார்.

புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க...

ஜூன் 21, இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின், இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரைப் பாதுகாப்பதற்கு, புதுப்பிக்கப்பட்ட மற்றும், உறுதியான அர்ப்பணம் இடம்பெறுவதற்கு, தன்னோடு சேர்ந்து செபிக்குமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

உலகில் ஏறத்தாழ எட்டு கோடிப் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்ற தகவல், ஜூன் 20, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் உலகநாளில், வெளியானதை முன்னிட்டு, அம்மக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்துவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழல் பராமரிப்பு

கொரோனா கொள்ளைநோய், புலம்பெயர்ந்தோர் குறித்து மட்டுமல்ல, மனிதருக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையேயுள்ள உறவு குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கும் நிலவிய முழு அடைப்பு, சுற்றுச்சூழல் மாசடைவதைக் குறைத்துள்ளது, இன்னும், போக்குவரத்து மற்றும், சப்தங்கள் இல்லாமையால், பல இடங்களின் அழகை மீண்டும் நமக்கு வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

இக்கொள்ளைநோயால் ஏற்படும் மரணங்களும், தொற்றுகளும், சில கண்டங்கள் மற்றும் பகுதிகளில் குறைந்திருப்பதால், நாடுகள், சமுதாய விலகலை சிறிது சிறிதாகத்  தளர்த்தத் தொடங்கியுள்ளன, இது, நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்கவும், வறுமை மற்றும், வேலைவாய்ப்பின்மையைக் குறைக்கவுமே இடம்பெற்றுள்ளன என்பதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

புனித அலாய்சியஸ் கொன்சாகா

ஜூன் 21, இஞ்ஞாயிறன்று, இயேசு சபை புனிதரான புனித அலாய்சியஸ் கொன்சாகா விழா சிறப்பிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, தனது அர்ஜென்டீனா நாட்டில், இஞ்ஞாயிறன்று தந்தை நாள் சிறப்பிக்கப்படுகின்றது, இந்நாளில் தந்தையர் அனைவருக்காகவும் செபிக்கின்றேன், தந்தையாக இருப்பது எளிதான பணி அல்ல என்றும் கூறினார்.

16ம் நூற்றாண்டில் உரோம் நகரில் கொள்ளைநோயில் பலியானவர்களுக்குப் பணியாற்றியதால் உயிரிழந்த புனித அலாய்சியஸ், கடவுள் மற்றும், அயலவர் மீது அளவுகடந்த அன்புகொண்டிருந்த இளைஞர் என்றும், இந்நாளில் இளைஞர்கள் எல்லாரையும் சிறப்பாக வாழ்த்துகிறேன் என்றும் திருத்தந்தை கூறினார்.

இயேசு சபை புனிதரான புனித அலாய்சியஸ் கொன்சாகா அவர்கள், 16ம் நூற்றாண்டில், தனது 23வது வயதில் இறைபதம் சேர்ந்தார். இவர், 1792ம் ஆண்டில், இளைஞர்களுக்குப் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார்.

21 June 2020, 12:45