தேடுதல்

Vatican News
பாலர் தொழிலாளர்முறைக்கு எதிர்ப்பு பாலர் தொழிலாளர்முறைக்கு எதிர்ப்பு  (AFP or licensors)

குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாள்

திருத்தந்தை: பாலர் தொழிலாளர்முறை என்பது, குழந்தைப்பருவத்தை அவர்களிடமிருந்து பறிப்பதோடு, அவர்களின் ஒருங்கிணைந்த முழு வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாள் (World Day Against Child Labour) ஜூன் 12, வருகிற வெள்ளிக்கிழமையன்று, சிறப்பிக்கப்பட உள்ளது குறித்து, தன் புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நினைவூட்டினார்.

குழந்தைப்பருவத்தில் தொழில் செய்ய கட்டாயப்படுத்தப்படுவது, அவர்களின் குழந்தைப்பருவத்தைப் பறிப்பதோடு, அவர்களின் ஒருங்கிணைந்த முழு வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நலத்தொடர்புடைய பிரச்சனைகளில், பல நாடுகளில், குழந்தைத் தொழிலாளர்கள், தங்கள் வயதிற்கு மீறிய வேலைகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர், ஏனெனில், மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் தங்கள் குடும்பத்திற்கு உதவ, இவர்கள் இத்கைய பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என, தன்  கவலையை வெளியிட்டார்.

பலவேளைகளில் இத்தகைய நிலைகள், அடிமைத்தனம், மற்றும், சிறைவைத்தல் போன்ற வடிவங்களை எடுத்து, சிறாரின் உடல், மற்றும், உள்ள வேதனைகளுக்கு காரணமாகின்றன என்றும், இந்நிலைக்கு, நாம் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும் என்றும், திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

சிறார்களின் துன்பநிலைகளுக்கு காரணமாக இருக்கும், பொருளாதார, மற்றும், சமூக பாகுபாடுகளை சமுதாயத்தில் களையவும், அதன் வழியாக, அவர்களைப் பாதுகாக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளே, மனித குடும்பத்தின் வருங்காலம் என்பதை நினைவில் கொண்டு, அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதும், அவர்களின் நல வாழ்விற்கும், அமைதிநிறை இயல்பு வாழ்வுக்கும் உறுதி வழங்குவதும் நம் அனைவரின் கடமை எனவும் எடுத்துரைத்தார்

10 June 2020, 13:53