தேடுதல்

Vatican News
உலக சுற்றுச்சூழல் நாள் உலக சுற்றுச்சூழல் நாள்  (ANSA)

நோயுற்ற உலகில் நலமாக உள்ளோம் என்பது, ஏமாற்று வேலை

நம் அன்னை பூமி மீது ஏற்படுத்தியுள்ள காயங்கள், நம் வாழ்வையும் காயப்படுத்துகின்றன. சூழலியல் அமைப்புகளைப் பராமரிப்பது, வருங்காலத்தை நோக்கியதாக இருக்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வருங்காலத் தலைமுறைகளுக்குச் சிறந்த மற்றும், நலமான பூமிக்கோளத்தை விட்டுச்செல்வதற்கு, மனிதரின் எண்ணங்களில் மாற்றம் தேவை என்று, ஜூன் 05, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் நாளில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொரோனா கொள்ளைநோய் காரணமாக, இவ்வாண்டு உலக சுற்றுச்சூழல் நாள் கொலம்பியா நாட்டில் இணையதளம் வழியாக சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, அந்நாட்டு அரசுத்தலைவர் Iván Duque Márquez அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பிய மடலில், இப்பூமிக்கோளத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர்கள் மதிக்கப்படுதல் ஆகிய இரு கூறுகளை வலியுறுத்தியுள்ளார்.

நோயுற்ற உலகில் நலமான வாழ்வு

நோயுற்ற உலகில் நலமாக உள்ளோம் என, நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கக் கூடாது என்று எழுதியுள்ள திருத்தந்தை, நம் அன்னை பூமி மீது ஏற்படுத்தியுள்ள காயங்கள், நம்மையும் காயப்படுத்துகின்றன என்றும், சூழலியல் அமைப்புகளைப் பராமரிப்பது, வருங்காலத்தை நோக்கியதாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது, வாழ்வு மீதும், நம் பூமிக்கோளத்தின் இப்போதைய நிலைமை பற்றிய நம் எண்ணம் மீதும் உண்மையிலேயே அக்கறை காட்டுவதாக இருக்கவேண்டும் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் அமைப்பின் அழிவு மற்றும், அது சுரண்டப்படுவதால் ஏற்படும் கடும் விளைவை உணரும்போது, நம்மால் மௌனம் காக்க முடியாது என்றும், பல நேரங்களில் முன்னேற்றம் என்ற பெயரில், இலாபம் என்ற பேராசையால், நம் பூமிக்கோளம் அழிவுறும்  அடையாளங்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பதற்கு, இதுவல்ல நேரம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.    

சிறந்த வருங்காலம்

நம் வருங்காலத் தலைமுறைகளுக்கு சிறந்த மற்றும், நலமான உலகை அமைக்க நம்மை அர்ப்பணிப்பதற்கு வாய்ப்பு உள்ளது, ஆனால் அதனைச் செயல்படுத்துவது நம்மைச் சார்ந்தே உள்ளது என்றுரைத்துள்ள திருத்தந்தை, அண்மையில் சிறப்பிக்கப்பட்ட Laudato Si’ திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிகழ்வுகள்,  நம் அன்னை பூமி, நம்மை நோக்கி எழுப்பும் அழுகுரல்கள் மீது கவனம் செலுத்தின என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

06 June 2020, 12:46