தேடுதல்

Vatican News
வத்திக்கானிலிருந்து, திருத்தந்தையின் தர்மப் பணிகள் அலுவலகம் அனுப்பிவைக்கும் வென்டிலேட்டர்கள் வத்திக்கானிலிருந்து, திருத்தந்தையின் தர்மப் பணிகள் அலுவலகம் அனுப்பிவைக்கும் வென்டிலேட்டர்கள் 

கோவிட்-19 நோயாளிகளின் அருகாமையில் திருத்தந்தை

கோவிட்-19 தொற்றுக்கிருமியால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள பல்வேறு வளரும் நாடுகளுக்கு, அண்மை வாரங்களில், 35 வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வாழ்வின் உண்மையான பொருளைக் கண்டுணராவிட்டால், தேவையற்றவைகளில் நாம் கவனம் செலுத்துகிறோம் என்பதை, ஜூன் 27, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“நீங்கள், உங்கள் வாழ்வின் பொருள் என்ன என்பதைத் தேடுகையில், ஏதாவது ஓர் அர்த்தத்தையாவது கண்டுகொள்ளாவிட்டால், செல்வம், தொழில், உலகம்தரும் இன்பம், போதையைக் கொடுக்கும் காரியங்கள் போன்றவற்றில் உங்களை உட்படுத்துகிறீர்கள், அதற்கு மாறாக, இயேசுவிடம் உங்களைக் கையளியுங்கள், அப்போது, நீங்கள் அன்புகூரப்பட்டு வருகிறீர்கள் என்பதைக் கண்டுகொள்வீர்கள்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

35 வென்டிலேட்டர்கள்

மேலும், கோவிட்-19 தொற்றுக்கிருமியால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள பல்வேறு வளரும் நாடுகளுக்கு, அண்மைய வாரங்களில், 35 வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இது குறித்து, ஜூன் 26, இவ்வெள்ளியன்று, திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளை ஆற்றும் அலுவலகம், அறிக்கை வெளியிட்ட வேளையில், கொரோனா கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளுடன், குறிப்பாக, நலவாழ்வு அமைப்புமுறை மிகவும் நலிவுற்ற நிலையிலுள்ள நாடுகளுடன் தனது அருகாமை மற்றும் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 35 வென்டிலேட்டர்களை வழங்கியுள்ளார் என்று கூறியுள்ளது.

இந்த வென்டிலேட்டர்கள், அந்தந்த நாடுகளின் திருப்பீட தூதர்கள் வழியாக அனுப்பப்பட்டுள்ளன என்றும் அறிவித்துள்ள அந்த அலுவலகம், ஹெய்ட்டி நாட்டிற்கு 4, தொமினிக்கன் குடியரசுக்கு 2, பொலிவியா நாட்டிற்கு 2, பிரேசிலுக்கு 4, கொலம்பியாவிற்கு 3, ஈக்குவதோருக்கு 2, கொண்டூராஸ் நாட்டிற்கு 3, மெக்சிகோ நாட்டிற்கு 3, வெனெசுவேலா நாட்டிற்கு 4, காமரூன் நாட்டிற்கு 2, பங்களாதேஷ் நாட்டிற்கு 2, உக்ரெய்ன் நாட்டிற்கு 2, ஜிம்பாப்வே நாட்டிற்கு 2 என, 35 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

27 June 2020, 13:26