தேடுதல்

Vatican News
புனித 6ம் பவுல் அரங்கில் புதன் மறைக்கல்வியுரை புனித 6ம் பவுல் அரங்கில் புதன் மறைக்கல்வியுரை  (AFP or licensors)

பல்லுயிர்கள் அழியும்வண்ணம் வாழ்வதற்கு நமக்கு உரிமை கிடையாது

ஒவ்வோர் ஆண்டும், ஆயிரக்கணக்கான தாவர மற்றும், விலங்கின வகைகள், மறைந்துவருவதை நாம் பார்த்து வருகிறோம்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும், ஆயிரக்கணக்கான தாவர மற்றும், விலங்கின வகைகள், மறைந்துவருவதை நாம் காண்கிறோம். இனிமேல் இவற்றை நம் குழந்தைகள் ஒருபோதும் பார்க்கவே முடியாது. நமது செயலால், ஆயிரக்கணக்கான பல்லுயிர்கள் தங்களின் இருப்பிற்காக கடவுளுக்கு மகிமையளிக்க முடியாதநிலை உருவாகியுள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

மே 22, இவ்வெள்ளியன்று, பல்லுயிர் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, பல்லுயிர்களைப் பாதுகாப்பது குறித்து, #Biodiversity #LaudatoSi5 என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், பல்லுயிர்கள் அழியும்வண்ணம் வாழ்வதற்கு நமக்கு உரிமை கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மே 21 டுவிட்டர் செய்திகள்

மே 21, இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு வழங்கிய செய்தியை மையப்படுத்தி தன் டுவிட்டர் செய்திகளையும் வெளியிட்டார்.

ஒருவர் இயேசுவைப் பின்பற்றினால், அவரால் கவரப்படுவதில் மகிழ்வடைவார், மற்றவர்களும் அதைக் கவனிப்பார்கள் மற்றும், அவர்கள் வியப்படையவும் செய்வார்கள். கிறிஸ்துவாலும், அவரின் ஆவியாலும் கவரப்பட்டவர்களில் பிரதிபலிக்கும் மகிழ்வு, எந்தவித மறைப்பணி முயற்சிகளையும் பயனுள்ளதாக்கும் என்ற சொற்கள் திருத்தந்தையின் நான்காவது டுவிட்டரில் பதிவாகியிருந்தன.  

இயேசு தம் சீடர்களிடம்,  தான் விண்ணேற்பு அடைவதற்குமுன், தேற்றரவாளரான தூய ஆவியாரை அவர்களுக்கு அனுப்புவதாகக் கூறினார். இவ்வாறு, அவர், தான் திரும்பிவரும்வரை, திருஅவையின் திருத்தூதுப் பணியை, எக்காலத்திற்கும் தூய ஆவியாரிடம் ஒப்படைத்தார் என்ற சொற்கள், திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டரில் இடம்பெற்றிருந்தன.    

தூய ஆவியாரைப் பெறுவதில் கிடைக்கும் மகிழ்வு, ஓர் அருளாகும், அதுவே, நற்செய்தியை அறிவிக்கவும், ஆண்டவரில் கொண்டிருக்கும் நம்பிக்கையை அறிக்கையிடவும் நமக்கு கிடைக்கும் ஒரே சக்தி. நம்பிக்கை என்பது, ஆண்டவர் நமக்கு வழங்கியுள்ள மகிழ்வுக்குச் சான்றுபகர்வதாகும். அத்தகையை மகிழ்வு, நம் சொந்த முயற்சிகளின் பலனால் கிடைப்பது அல்ல என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டரில் இடம்பெற்றிருந்தன.    

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளுடன், பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு, மே 21ம் தேதி திருத்தந்தை வழங்கிய செய்தியை இணையதளத்தில் வாசிப்பதற்கு உதவும் முகவரிகளும் வழங்கப்பட்டுள்ளன.

#Ascension http://w2.vatican.va/content/francesco/en/messages/pont-messages/2020/documents/papa-francesco_20200521_messaggio-pom.html

http://w2.vatican.va/content/francesco/en/messages/pont-messages/2020/documents/papa-francesco_20200521_messaggio-pom.html

22 May 2020, 14:37