தேடுதல்

Vatican News
அனைவரும் இணைந்து செபித்தல் அனைவரும் இணைந்து செபித்தல்  (AFP or licensors)

திருத்தந்தையின் ஆறு டுவிட்டர் செய்திகள்

இறைவனை நோக்கி செபிக்கவும், உண்ணா நோன்பிருக்கவும், பிறரன்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இம்மாதம் 14ம் தேதி, அனைத்து மத நம்பிகையாளர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அண்மைக்கால நெருக்கடிகளால் தங்கள் வேலைகளை இழந்து தவிக்கும் மக்களுக்காக ஒன்றிணைந்து செப்பிப்போம் என மே 11, இத்திங்களன்று வெளியிட்ட தன் முதல் டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று, சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியின் துவக்கத்தில் குறிப்பிட்டக் கருத்தை மையமாக வைத்து, இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை, வேலை வாய்ப்பின்மையால் துயருறும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக செபிப்போம் என, அதில் அழைப்பு விடுத்துள்ளார்.

இத்திங்களன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டரில், இத்திங்கள் காலை, திருப்பலியில் வழங்கிய மறையுரையை மையமாக வைத்து, தூயஆவியார், விசுவாசத்திலும், தேர்ந்து தெளியும் பண்பிலும் நாம் வளர்வதற்கு ஆற்றி வரும் உதவிகளைப் பற்றி எழுதியுள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற இறைவனை நோக்கி செபிக்கவும், உண்ணா நோன்பிருக்கவும், பிறரன்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இம்மாதம் 14ம் தேதி, அதாவது, வருகிற வியாழனன்று, அனைத்து மத நம்பிக்கையாளர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நினைவுறுத்த விரும்புவதாக, தன் மூன்றாவது டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பிக்கப்பட்ட 'உலக அன்னையர் தினம்' குறித்து தன் ஞாயிறு டுவிட்டர் செய்திகளுள் ஒன்றில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னையர்களை அன்போடும் நன்றியுணர்வோடும் நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ளார்.

நம் விண்ணுலக அன்னையாம் மரியாவின் பாதுகாப்பில் அனைத்து அன்னையர்களையும் ஒப்படைப்பதாக தன் டுவிட்டரில் கூறியுள்ள திருத்தந்தை, வானுலகில் இருந்துகொண்டே நம்மோடு வழிநடக்கும் அன்னையர்களையும் இவ்வேளையில் நினைவுகூர்வோம் என அதில் கூறியுள்ளார்.

இந்த ஞாயிறன்று மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாவது டுவிட்டரில், ஞாயிறு நற்செய்தி வாசகத்தையொட்டி வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில், உள்ளம் கலங்கியோருக்கு முன்வைத்த இரு தீர்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். நம்மையே முற்றிலும் சார்ந்திருக்காமல், இயேசுவில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதை முதல் தீர்வாகவும், நமக்கென ஓர் இடம் விண்ணுலகில் உள்ளது என்ற உறுதியுடன் நடைபோடுவாம் என்பதை  இரண்டாவது தீர்வாகவும் இந்த டுவிட்டர் செய்தியில் எடுத்தியம்பியுள்ளார் திருத்தந்தை.

திருஅவையில் செபத்தின் முக்கியத்துவம் குறித்து இன்னுமொரு டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, செபிப்பதற்கும் ஒரு மனவுறுதி தேவைப்படுகின்றது, செபிப்பது என்பது, நமக்கு அனைத்தையும் வழங்கும் இறைத்தந்தையை நோக்கி இயேசுவுடன் செல்வதாகும். மனவுறுதியுடன் கூடிய இந்த செபத்தினாலேயே திருஅவை முன்னோக்கிச் செல்கிறது, ஏனெனில், தூய ஆவியார் கற்பிப்பதுபோல், நாம்  வாழ்வில் குறைவாகவே ஆற்றுகிறோம், திருஅவைக்கு வல்ல செயல்களை ஆற்றுபவர் தூய ஆவியானவரே எனவும் எழுதியுள்ளார்.

11 May 2020, 13:26