தேடுதல்

Vatican News
லுஹான் அன்னை மரியா திருத்தலம் லுஹான் அன்னை மரியா திருத்தலம்  (AFP or licensors)

லுஹான் அன்னை மரியா விழாவுக்கு திருத்தந்தை வாழ்த்து

லுஹான் நகரம், அர்ஜென்டீனா நாட்டுத் தலைநகர் புவனெஸ் அய்ரஸ் நகருக்கு வடமேற்கே ஏறத்தாழ எழுபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அர்ஜென்டீனா நாட்டில் சிறப்பிக்கப்படும் லுஹான் (Luján) அன்னை மரியா விழாவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 04, இத்திங்களன்று வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

மே 08, வருகிற வெள்ளியன்று சிறப்பிக்கப்படும் லுஹான்  அன்னை மரியா விழாவுக்கென, Mercedes-Luján உயர்மறைமாவட்ட பேராயர் Jorge Scheinig அவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை, இந்தக் கொண்டாட்டங்களுக்கென, தன் இதயம் லுஹான் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நம் அன்னையை நோக்குவோம்

லுஹான் அன்னை மரியா, தன் தாய்க்குரிய பார்வையால், நம்மை நோக்குவதற்கும், அதன் வழியாக நாம் புதுப்பித்தலைப் பெறுவதற்கும் செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அன்னை மரியா, அனைவருக்கும் சக்தியை வழங்குவாராக மற்றும், அனைவரையும் பராமரிப்பாராக என்று கூறியுள்ளார்.

விசுவாசிகள் அனைவரின் கவலைகள் மற்றும் இன்பங்களை, அவர்களோடு இணைந்து, அன்னை மரியாவிடம் தானும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, மக்கள் எல்லாரையும் அன்னை மரியா ஆசீர்வதிப்பாராக என்று கூறியுள்ளார்.

லுஹான் நகரம், அர்ஜென்டீனா நாட்டுத் தலைநகர் புவனெஸ் அய்ரஸ் நகருக்கு வடமேற்கே ஏறத்தாழ எழுபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1998ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியிலிருந்து, 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி வரை, புவனெஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்ட பேராயராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

05 May 2020, 14:01