தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் அல்லேலுயா வாழ்த்தொலி உரை. 03.05.20 திருத்தந்தையின் அல்லேலுயா வாழ்த்தொலி உரை. 03.05.20  

இறைவனின் குரலையும், தீயோனின் குரலையும் அடையாளம் காண்தல்

திருத்தந்தை பிரான்சிஸ்: நம்மை பொறுமையாக திருத்தி, ஆறுதல் அளித்து, ஊக்கம் வழங்கி, நம்பிக்கையை நம்மில் ஊட்டுகிறார் இறைவன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வின் எந்நிலையில் நாம் இருந்தாலும், எப்போதும் இறைவனின் அழைப்பிற்கு பதிலளிப்பதே கிறிஸ்தவ வாழ்வாகும் என, இஞ்ஞாயிறன்று, அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் ஆயனின் குரலுக்கு செவிமடுக்கும் ஆடுகள் குறித்து விவரிக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (யோவான் 10:1-10) மையப்படுத்தி தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் குரலுக்கும், சோதனைக்குட்படுத்தும் தீயோனின் குரலுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் கண்டுகொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தன் நூலகத்திலிருந்து, காணொளி வழியாக, இஞ்ஞாயிறு வாழ்த்தொலியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீயோன் நமக்கு வீண்புகழ்ச்சியை வழங்கி, நாம் அனைத்து வல்லமைகளையும் உடையவர் என நம்பவைத்து, பின்னர் நம் உள்மனதை வெற்றிடமாக்குவதுடன்,  நம்மையும் குற்றஞ்சாட்டுகிறான் என்றும், அதேவேளை, இயேசுவோ, நம்மை பொறுமையாக திருத்தி நமக்கு ஆறுதல் அளித்து, ஊக்கம் வழங்கி, நம்பிக்கையை நம்மில் ஊட்டுகிறார் என்றும் கூறினார்.

தீயோன் நமக்கு முன்வைக்கும் சோதனையின் குரல்கள், நம் சுயநலத்தையேச் சுற்றி அமைக்கப்படுகின்றன எனவும், இறைவனின் குரலோ, உண்மை அமைதியையும், நன்மைத்தனத்தையும் நாடி, நம்மையும் தாண்டி செல்லவேண்டியதற்கு அழைப்பு விடுக்கின்றது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்குள் எழும் குரல்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை கண்டுகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நம்மைச் சந்திக்கவரும் இயேசு, நம்மீது கொள்ளும் அன்பின் வழியாகவே இறையழைத்தல் பிறக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் கடந்துசெல்லும் இறைவனை அடையாளம் கண்டு, அவருக்கு நம் இதயங்களைத் திறக்கும்போது, நம் அழைப்பை கண்டுகொள்வதில் வெற்றியடைகின்றோம் என மேலும் கூறினார்.

04 May 2020, 12:37