தேடுதல்

ஸ்லோவாக்கியாவின் அன்னை மரியா திருத்தலம் ஸ்லோவாக்கியாவின் அன்னை மரியா திருத்தலம் 

மே 14, செபம், உண்ணா நோன்பு, மற்றும், பிறரன்பின் நாள்

திருத்தந்தை : இவ்வாண்டு கொரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக, மக்கள், வீட்டில் இருந்தவாறே, அன்னை மரியா திருத்தலங்களுக்கு, ஆன்மீக முறையில் பயணம் மேற்கொள்வோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே மாதம் மூன்றாம் தேதி  இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட நல்லாயன் ஞாயிறன்று, தன் நூலகத்திலிருந்து அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், தேவ அழைத்தலுக்காக செபிக்கும் உலக செப நாள் இது என்பதை நினைவூட்டி, அனைவரின் செபங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

குருத்துவமும் துறவற வாழ்வும் எதிர்பார்க்கும் மனஉறுதியும் விடாமுயற்சியும் கொண்ட பாதையை, நாம் செபத்தினால் அன்றி வேறு எதனாலும் பெறமுடியாது என்று கூறியத் திருத்தந்தை, நல்ல பணியாளர்கள் எனும் கொடைக்காக இறைவனை வேண்டுமாறு அழைப்பு விடுத்தார்.

இன்றைய உலக நெருக்கடியை குறிப்பிட்டு, கோவிட்-19 நோய்க்கு தடுப்பு மருந்தும், நோய் அகற்றும் மருந்தும் கண்டுபிடிக்கப்படுவதற்கு, உலக அளவில், ஒருங்கிணைந்த முயற்சிகள் இடம்பெறவேண்டும் எனவும் விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மதநம்பிக்கையுடைய அனைவரும் இணைந்து, இம்மாதம் 14ம் தேதியன்று, செபம், உண்ணா நோன்பு, மற்றும், பிறரன்பு நடவடிக்கையின் நாளை கடைபிடிக்க, மனித உடன்பிறந்த நிலை என்ற அமைப்பின் உயர்மட்ட குழு விடுத்துள்ள பரிந்துரையை தானும் ஏற்றுள்ளதாக அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் முயற்சிகளை, இந்நோய் அகற்றலுக்கான இறைவேண்டலுக்கு சமர்ப்பிக்க உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த மே மாதத்தில், ஒவ்வோர் ஆண்டும் அன்னை மரியா திருத்தலங்களுக்கு விசுவாசிகள் திருப்பயணம் மேற்கொள்வதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு கொரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக, மக்கள், வீட்டில் இருந்தவாறே, இத்திருத்தலங்களுக்கு, ஆன்மீக முறையில் பயணம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2020, 12:44