தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மே மாத செபக்கருத்துடன் வெளியான காணொளி திருத்தந்தையின் மே மாத செபக்கருத்துடன் வெளியான காணொளி 

திருத்தொண்டர்களுக்காக செபிக்கும் மே மாத செபக்கருத்து

திருத்தொண்டர்கள், இரண்டாம் நிலை அருள்பணியாளர்கள் அல்ல, அவர்கள் அருள்பணித்துவ குழுவில் இணைந்தவர்கள், திருஅவையின் பணிகளுக்கு, இவர்களே காவலர்கள் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட செபக்கருத்தை வெளியிட்டு, மக்களை இறைவேண்டுதல் செய்ய அழைத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மே மாதத்தின் சிறப்பு செபக்கருத்தாக, திருத்தொண்டர்களுக்காக செபிக்கும்படி விண்ணப்பித்துள்ளார்.

நிரந்தர திருத்தொண்டர்களாகப் பணியாற்றுவோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் செபிக்கும்படி கூறியுள்ள திருத்தந்தை, இறைவார்த்தைக்கும், வறியோருக்கும் பிரமாணிக்கமாக பணியாற்ற அழைப்பு பெற்றுள்ள திருத்தொண்டர்கள், திருஅவையின் சக்திமிகுந்த அடையாளங்களாக விளங்குமாறு செபிப்போமாக என்று அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தொண்டர்கள், இரண்டாம் நிலை அருள்பணியாளர்கள் அல்ல, அவர்கள் அருள்பணித்துவ குழுவில் இணைந்தவர்கள், அதேவேளையில், தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து, தங்கள் இறையழைத்தலை வாழ்பவர்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை, திருஅவையின் பணிகளுக்கு, இவர்களே காவலர்களாக விளங்குகின்றனர் என்று எடுத்துரைத்துள்ளார்.

இயேசு சபையினரால் நடத்தப்படும் திருத்தூது இறைவேண்டல் பணிக்குழு, ஒவ்வொரு மாதமும், திருத்தந்தை வெளியிட்டு வரும் இறைவேண்டல் கருத்துக்களை "The Pope Video" என்ற காணொளி வழியே வெளியிட்டு வருகிறது.

இந்த மே மாதத்திற்குரிய "The Pope Video" காணொளி, மே 5, இச்செவ்வாய் பிற்பகலில் வெளியிடப்பட்டது.

06 May 2020, 14:31