தேடுதல்

Vatican News
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் திருவுருவச் சிலை திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் திருவுருவச் சிலை   (ANSA)

பரந்த பார்வையுடைய திருஅவையாகச் செயல்படவேண்டிய தேவை

இறைவன் மீதும் மனிதர்கள் மீதும், இயற்கை, வரலாறு, மற்றும், கலைகளின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவராகச் செயல்பட்ட புனித திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் உரோம் நகரில் கல்வி பயின்ற ஆஞ்சலிக்கம் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில், இத்திருத்தந்தையின் பெயரில் கலாச்சாரத்துறை ஒன்று துவக்கப்பட்டுள்ளதையொட்டி, அப்பல்கலைக்கழக அதிபருக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போலந்து நாட்டில் பிறந்த இப்புனிதத் திருத்தந்தையின் பெயரால் துவக்கப்படும் இப்புதியத் துறைக்கு, Futura Iuventa, மற்றும், Saint Nicholas, ஆகிய இரு போலந்து நிறுவனங்கள், நிதியுதவி வழங்கியுள்ளது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.
இறைவன் மீதும் மனிதர்கள் மீதும், இயற்கை, வரலாறு, மற்றும், கலைகளின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவராகச் செயல்பட்ட இப்புனிதத் திருத்தந்தை, இக்காலக் கலாச்சாரத்தை பரந்ததோர் பார்வையில் நோக்க நமக்கு வழிகாட்டுதல்களை விட்டுச் சென்றுள்ளார் எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துக் கலாச்சாரங்களையும், நல்மனம் கொண்ட அனைத்து மக்களையும் அணுகி, மதிக்கவேண்டும் என்பதையும் காட்டிச்சென்ற இத்திருத்தந்தையின் அணுகுமுறையைக் கடைபிடித்து, நமக்குள் இருப்பவைகள் குறித்து மட்டும் பெருமைப்படாமல், பரந்ததொரு கண்ணோட்டம் கொண்ட திருஅவையாகச் செயல்படவேண்டிய தேவை உள்ளது என அவ்வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தொமினிக்கன் துறவுசபையால் நடத்தப்படும் இப்பல்கலைக்கழகத்தின் அதிபர், தொமினிக்கன் அருள்பணி Michał Paluch அவர்களுக்கு திருத்தந்தையால் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதம், விசுவாசம் குறித்த பகுத்தறிவு சிந்தனைகளுக்கு இத்துறவுசபை ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியுள்ளது.

 

18 May 2020, 13:43