தேடுதல்

Vatican News
ஆஸ்தாலி புலம்பெயர்ந்தோர் அமைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ்  ஆஸ்தாலி புலம்பெயர்ந்தோர் அமைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ்  

உரோம் ஆஸ்தாலி புலம்பெயர்ந்தோர் மையத்திற்கு திருத்தந்தை நன்றி

சமுதாயத்தில், உண்மையான வரவேற்பு மற்றும், ஒருமைப்பாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கு, புதியதொரு ஆவல் தூண்டிவிடப்படுவதற்கு, ஆஸ்தாலி மையம் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கட்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரிலுள்ள இயேசு சபையினரின் ஆஸ்தாலி (Astalli) மையம், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோருக்கு ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

JRS எனப்படும், இயேசு சபையினரின் உலகளாவிய புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இத்தாலியக் கிளையான ஆஸ்தாலி மையத்தின் இயக்குனர், இயேசு சபை அருள்பணி Camillo Ripamonti அவர்களுக்கு அனுப்பிய மடலில், அம்மையத்தின் பணிகளைப் பாராட்டி ஊக்குவித்துள்ளார், திருத்தந்தை.

ஆஸ்தாலி மையம் வெளியிட்ட, 2020ம் ஆண்டின் ஆண்டறிக்கைக்குப் பதிலளிக்கும் முறையில் இந்த மடலை அனுப்பியுள்ள திருத்தந்தை, அந்த மையத்தில் உதவிபெறும் அனைத்து புலம்பெயர்ந்தோருடன் தனது அருகாமையையும் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தில், உண்மையான வரவேற்பு மற்றும், ஒருமைப்பாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கு, புதியதொரு ஆவல் தூண்டிவிடப்படுவதற்கு, இந்த மையம் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கட்டும் என்றும், தன் மடலில் வாழ்த்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போர், அடக்குமுறை, மற்றும், கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளால் புலம்பெயர்வோருக்குப் புகலிடம் வழங்கப்படுவதற்கு அவசியமான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் துணிவுடன் உழைத்துவரும் ஆஸ்தாலி மையத்திற்கும், அதில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கும் திருத்தந்தை நன்றி தெரிவித்துள்ளார். 

புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சிக்கலான சூழலுக்குத் திறந்தமனத்துடன் செயல்பட்டு, அம்மக்களுக்குப் போதுமான உதவிகள் கிடைப்பதற்கு உழைத்துவரும் ஆஸ்தாலி மையம், ஐரோப்பிய கலாச்சாரத்தை வடிவமைத்துள்ள, மனித மற்றும், கிறிஸ்தவ விழுமியங்களுக்கு சான்றுபகர்ந்து வருகின்றது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அம்மடலில், உலக அளவில் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உழைத்துவரும் அனைவரையும், ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 23, கடந்த சனிக்கிழமை தேதியிட்டு அனுப்பிய இம்மடலை, உரோம் நகரிலுள்ள, இயேசு சபையினரின் ஆஸ்தாலி மையம், மே 28, இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

29 May 2020, 13:58