Laudato si’ சிறப்பு ஆண்டிற்கு சிறப்பு செபம்
மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்
மே 24, இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள, Laudato si’ சிறப்பு ஆண்டு பற்றிக் குறிப்பிட்டு, அவ்வாண்டிற்கென வெளியிடப்பட்டுள்ள சிறப்பு செபத்தைச் செபிக்குமாறு, இஞ்ஞாயிறு நண்பகலில் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 24 இஞ்ஞாயிறிலிருந்து, 2021ம் ஆண்டு மே 24 வரை, Laudato si’ சிறப்பு ஆண்டு கொண்டாடப்படும் என்று அறிவித்த திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட 54வது உலக சமூகத்தொடர்பு நாள் பற்றியும் குறிப்பிட்டார்.
நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது பற்றிய, இறைவா உமக்கேப் புகழ் என்று பொருள்படும் Laudato si’ திருமடல் வெளியிடப்பட்டு ஐந்து ஆண்டுகள், இஞ்ஞாயிறோடு நிறைவடைகின்றது என்பதை நினைவுபடுத்திய திருத்தந்தை, இத்திருமடல், இப்பூமி மற்றும், ஏழைகள் சிந்தும் கண்ணீர் மீது கவனம் செலுத்துமாறு அழைப்பு விடுக்கிறது என்றும் கூறினார்.
வத்திக்கான் மாளிகையிலுள்ள தனது நூலகத்திலிருந்து வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமி மற்றும், மிகவும் நலிந்த நம் சகோதரர் சகோதரிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில், நல்மனம் கொண்ட அனைத்து மக்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்.
Laudato si’ ஆண்டிற்கு செபம்
அன்பான கடவுளே,
விண்ணையும், மண்ணையும் மற்றும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவரே,
எம் மனங்களைத் திறந்தருளும் மற்றும், எம் இதயங்களைத் தொடும்
இதனால், நாங்கள் உம் கொடையாகிய படைப்பின் ஓர் அங்கமாக இருக்க இயலும்.
இந்த துன்பம்நிறைந்த நாள்களில் தேவையில் இருப்பவர்களில்,
குறிப்பாக, கடும் வறியோர் மற்றும் மிகவும் நலிந்தவர்களில் பிரசன்னமாயிரும்.
உலகளவில் பாதித்துள்ள கொள்ளைநோயின் விளைவுகளை நாங்கள் எதிர்கொள்கையில்
படைப்பாற்றல்மிக்க ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த எமக்கு உதவும்.
பொதுவான நலனைத் தேடுகையில் தேவைப்படும் மாற்றங்களை ஏற்பதில்
எம்மைத் துணிவுள்ளவர்களாக்கும்.
நாங்கள் ஒருவர் ஒருவருடன் தொடர்புள்ளவர்கள் மற்றும், ஒருவர் ஒருவரைச் சார்ந்தவர்கள் என்பதை,
எக்காலத்தையும்விட இக்காலத்தில் அதிகமாக உணரச் செய்யும்.
இப்பூமியின் அழுகுரல் மற்றும், வறியோரின் அழுகுரலுக்குச் செவிமடுத்து அவற்றுக்குப் பதிலளிப்பதில் வெற்றியடைய எமக்கு உதவும்.
அவர்களின் தற்போதைய துன்பங்கள், உடன்பிறந்த உணர்வுகொண்ட உலகின் பேறுகால வேதனையாக மாறுவதாக.
இவையனைத்தையும், சகாய அன்னை மரியாவின் அன்புப் பார்வையில், எம் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, விண்ணப்பிக்கின்றோம். ஆமென்.