தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது - 270520 புதன் மறைக்கல்வியுரையின்போது - 270520 

மறைக்கல்வியுரை : இறைவனின் திட்டம் நன்மைக்குரியது

கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்தும்படியாக, நாமும், விசுவாசத்துடன் இறைவனை நோக்கிச்செபிப்போம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கடந்த இரு மாதங்களுக்கு மேலாக, தன் புதன் மறைக்கல்வியுரையையும், ஞாயிறு நண்பகல் செப உரையையும், வத்திக்கான் மாளிகையிலுள்ள தன் நூலக அறையிலிருந்துகொண்டு, காணொளி வழியாக வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரமும் அங்கிருந்தே மறைக்கல்வி உரையை வழங்கினார்.  செபம் குறித்த தொடரின் நான்காவது வாரமாகிய மே 27, இப்புதனன்று, நீதிமான்களின் செபம் குறித்த தன் சிந்தனைகளை, திருத்தந்தை அவர்கள் பகிர்வதற்கு முன்னர், திருப்பாடல் 17ன் முதல் பகுதி முதலில் வாசிக்கப்பட்டது. பின், திருத்தந்தையின் உரைத் தொடர்ந்தது.

 

ஆண்டவரே, என் வழக்கின்

நியாயத்தைக் கேட்டருளும்;

என் வேண்டுதலை உற்றுக் கேளும்;

வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்

என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

உம் முன்னிலையினின்று

எனக்கு நீதி கிடைக்கட்டும்;

உம் கண்கள் நேரியன காணட்டும்.

என் உள்ளத்தை ஆய்ந்தறியும்;

இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்;

என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்;

தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்;

என் வாய் பிழை செய்யக்கூடாதென

உறுதி கொண்டேன்………….

என் நடத்தை

உம் பாதைகளில் அமைந்துள்ளது;

என் காலடிகள்

உம் வழியினின்று பிறழவில்லை. (தி.பா. 17,1-3.5) 

 

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, செபம் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில், இன்று நாம், நீதிமான்களின் செபம் குறித்து நோக்குவோம். தொடக்க நூலில் நாம் காணும், நம் முதல் பெற்றோரின் வீழ்ச்சியும், ஆபேல் கொலைசெய்யப்பட்டதும், எவ்வாறு தீமையும் பாவமும் தலைமுறைகளுக்கும் விரிந்து வருகிறது என்பதைக் காட்டுகின்றன. இவ்வுலகில் தீய வழிகள் இன்னும் இருப்பதை, அனுபவத்தால் நாம் கண்டுவருகிறோம். இருந்தாலும், தன் படைப்பிற்குரிய இறைவனின் திட்டம் என்பது, நன்மைக்கேயன்றி, தீமைக்குரியதல்ல. திருவிவிலியத்தின் முதல் பக்கங்களில், நாம், ஆபேல், சேத், ஏனோக், நோவா ஆகியோர் எவ்வளவு தாழ்ச்சியுடனும், உண்மையுடனும் இறைவனை நோக்கி செபித்தார்கள் என்பதையும் காண்கிறோம். செபத்தின் நீதிமான்களாகிய இவர்கள் அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாகச் செயல்பட்டனர். உண்மை செபம் என்பது, வன்முறை எண்ணப் போக்கிலிருந்து விடுதலை பெற்றதாகச் செயல்படுவதாகும். இது, இறைவனை நோக்கிய நம்பிக்கை நிறைந்த பார்வையாகும். இது பகைமையின் நிலத்தில் வன்முறையை அகற்றி, புதிய வாழ்வை வளர்க்கவல்லது. வரலாறு முழுவதும், நல்ல குணமுடைய, செப உணர்வுகொண்ட மனிதர்கள் பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளனர், அல்லது, வாழ்வின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களே இவ்வுலகிற்காக இறைவனிடம் தொடர்ந்து மன்றாடி, குணப்படுத்தலையும் வளர்ச்சியையும் கொணரும் இறைவல்லமைக்காகச் செபித்துள்ளனர். கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்தும்படியாக, அவர்களைப்போல் நாமும், நம்பிக்கையுடன் இறைவனை நோக்கிச் செபிப்போம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாளை மறுநாள், அதாவது, மே 29, வருகிற வெள்ளியன்று, புனித திருத்தந்தை 6ம் பவுலின் திருவழிபாட்டு நினைவு நாள், அதாவது அவரின் விழா, சிறப்பிக்கப்பட உள்ளதை நினைவூட்டினார். உரோமையின் ஆயராக செயல்பட்ட இவர், புனிதத்துவத்தின் உச்ச நிலையை அடைந்தார், மற்றும், தன் எடுத்துக்காட்டுகள் வழியாக, அனைவரும் நற்செய்தி மதிப்பீடுகளை தழுவிக்கொள்ள ஊக்கமளிக்கிறார் என்று திருத்தந்தை கூறினார்.

மேலும், பெந்தக்கோஸ்து பெருவிழாவிற்காக நம்மை தயாரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நம் இதயத்திற்குள் தூய ஆவியார் பொழியும் அன்பிற்கு நம்மைத் திறந்தவர்களாக செயல்படுவோமாக என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயதுமுதிர்ந்தோர், இளைஞர், புதுமண தம்பதியர் ஆகிய அனைவரையும், தனிப்பட்ட விதத்தில் நினைவுகூர்வதாகவும் எடுத்தியம்பினார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

27 May 2020, 12:44