தேடுதல்

திருத்தந்தையின் மறைக்கல்வியுரையின்போது - 060520 திருத்தந்தையின் மறைக்கல்வியுரையின்போது - 060520 

இக்கொள்ளை நோய்க்காலத்தில், விவசாயிகள் நிலை

திருத்தந்தை : இன்றைய தொற்றுநோய் பிரச்சனை அனைவரையும் பாதித்துள்ளது உண்மையெனினும், மனிதர்களின் மாண்பு, எச்சூழலிலும் மதிக்கப்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்துன்பகரமான கொள்ளைநோய்க் காலத்தில், விவசாயத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் குறித்து, இப்புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில், தன் கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மே மாதம் முதல் தேதி, அதாவது, தொழிலாளர் தினத்தன்று, தொழிலாளர் உலகம், மற்றும், தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து பல செய்திகளை, தான் பெற்றதாக அறிவித்த திருத்தந்தை, இத்தாலியின் கிராமப்புறங்களில், குடிபெயர்ந்தோர் உட்பட, பெரிய எண்ணிக்கையில் பணிபுரியும் பண்ணைத் தொழிலாளர்கள் குறித்து, தனிப்பட்ட விதத்தில், தான் கவலை கொண்டுள்ளதாக கூறினார்.

இதில் பலர் மிகவும் மோசமான நிலையில் சுரண்டப்பட்டு வருவது மிகுந்த கவலை தருவதாக உள்ளது எனவும் கூறிய திருத்தந்தை, இன்றைய தொற்றுநோய்ப் பிரச்சனை அனைவரையும் பாதித்துள்ளது உண்மையெனினும், மனிதர்களின் மாண்பு எப்போதும் மதிக்கப்படவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மனிதர்களின் மாண்பு எச்சுழலிலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்திலேயே, இந்த இத்தாலிய விவசாயத் தொழிலாளர்கள் சார்பாகவும், சுரண்டப்படும் அனைத்துத் தொழிலாளர்கள் சார்பாகவும், இந்த விண்ணப்பத்தை விடுப்பதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தொழில், மற்றும், தொழிலாளர்களின் மாண்பு மதிக்கப்பட வேண்டும் என்பது நம் அக்கறையின் மையமாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய நெருக்கடிச் சூழல் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதாக என்று, தன் விண்ணப்பத்தை புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2020, 12:02