தேடுதல்

Vatican News
புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் உலக நாளில் திருத்தந்தையின் திருப்பலி புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் உலக நாளில் திருத்தந்தையின் திருப்பலி   (AFP or licensors)

புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாள் செய்தி

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது மற்றும், அதை கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப அமைப்பதற்கு, நம்மையே அர்ப்பணிக்கவேண்டும், இதற்கு, பன்னாட்டு ஒத்துழைப்பு, மற்றும், உலகளாவிய ஒருமைப்பாடு அவசியம்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தப்பித்துச் செல்லவேண்டிய சூழலுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட இயேசுவைப் போன்று, நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களை, வரவேற்று, பாதுகாத்து, அவர்களை சமுதாயத்தோடு ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வருகிற செப்டம்பர் 27ம் தேதி கடைப்பிடிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாளுக்கென, மே 15, இவ்வெள்ளியன்று வெளியிட்ட செய்தியில், இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“இயேசு கிறிஸ்துபோன்று, தப்பித்துச்செல்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டு” என்ற தலைப்பில், திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியில், 2018ம் ஆண்டில், இந்த உலக நாளுக்கென தான் வெளியிட்ட செய்தி, வரவேற்பளி, பாதுகாப்பளி, ஊக்கமளி, ஒன்றிணை ஆகிய நான்கு சொற்களை மையப்படுத்தி இருந்தது, இவ்வாண்டு இவற்றுடன் மேலும் ஆறு வினைச்சொற்களை இணைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புரிந்துகொள்வதற்காக அறிதல், பணியாற்றுவதற்காக நெருங்கிச் செல்தல், ஒப்புரவாகுவதற்காகச் செவிமடுத்தல், வளருவதற்காகப் பகிர்தல், மேம்படுத்துவதற்காக ஈடுபடுதல், கட்டியெழுப்புவதற்காக ஒத்துழைத்தல் ஆகிய தலைப்புக்களில், புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாள் செய்தியை விவரித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டின் இச்செய்தியில், நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமை குறித்து தன் எண்ணங்களை எடுத்துரைத்திருப்பதன் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ள   திருத்தந்தை, பலநேரங்களில் புறக்கணிக்கப்படும் இந்த மக்களின் துன்பங்கள், தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியில், மேலும் அதிகரித்துள்ளன என்று கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் அனுபவிக்கும், அச்சம், நிச்சயமற்றதன்மை,  கவலை ஆகியவற்றால் நிறைந்த பெருந்துயரத்தையே, குழந்தை இயேசு தன் பெற்றோருடன் எகிப்துக்குத் தப்பித்துச்சென்றபோது அனுபவித்தார் என்றும், இன்றைய நாள்களிலும், இதே மாதிரியான பெருந்துயரை அனுபவிக்கும் இலட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன என்றும், திருத்தந்தை கூறினார்.

மற்றவரைப் புரிந்துகொள்வதற்கு

மற்றவரைப் புரிந்துகொள்வதற்கு, அறிவு முக்கியம் என்றும், இதற்கு எம்மாவு சென்ற சாலையில், தான் சீடர்களைச் சந்தித்தது பற்றி இயேசுவே நமக்குச் சொல்கிறார் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் பற்றி நாம் பேசுகையில், பலநேரங்களில், எண்ணிக்கையை கணக்கிடுவதில் நிறுத்தி விடுகிறோம், ஆனால் அது புள்ளிவிவரம் பற்றியது அல்ல, மாறாக, உண்மையான மக்கள் பற்றியது என்று எடுத்துரைத்துள்ளார்.

“இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன” (லூக்.24:15-16)

புலம்பெயர்ந்துள்ள இந்த மக்களை நாம் சந்தித்தால், அவர்கள் பற்றி அதிகம் அறிந்துகொள்வோம் என்று உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணியாற்றுவதற்கு, நெருங்கிச் செல்லவேண்டும் எனவும், இதற்கு நல்ல சமாரியர் உவமையை (லூக்.10:33-34)  எடுத்துக்காட்டாகவும் குறிப்பிட்டுள்ளார். 

பிறருக்கு நெருக்கமாகச் செல்வது

அச்சமும், முற்சார்பு எண்ணங்களும், மற்றவரிடமிருந்து நம்மை தொலைவில் வைக்கின்றன என்றும், இவை, அன்புடன் அவர்களுக்குச் சேவையாற்றும் அயலவர்களாக மாறுவதற்குத் தடையாய் இருக்கின்றன என்றும் கூறியுள்ள திருத்தந்தை, பிறருக்கு நெருக்கமாகச் செல்வது என்பது, சவால்கள் எடுப்பதற்கு விருப்பம் கொள்வதாகும், இதனை அண்மை மாதங்களில், பல மருத்துவர்களும், செவிலியர்களும் நமக்குக் கற்றுத்தந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றவருக்கு நெருக்கமாகச் செல்வதற்கும், பணிபுரிவதற்கும் தயாராக இருப்பது, கடமையுணர்வையும் கடந்துசெல்வது என்றும், தன் சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்வு (cf.யோவா.13:1-15) வழியாக இயேசு, மாபெரும் பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.  

ஒப்புரவாகுவதற்காகச் செவிமடுத்தல்,

கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியதன் வழியாக, ஒப்புரவாகுவதற்காகச் செவிமடுத்தலைக் கற்றுத்தருகிறார் (யோவா.3:16-17)  என்றும், அவர் துன்புறும் மனித சமுதாயத்தின் விண்ணப்பத்தை, மனிதக் காதுகள் கொண்டு கேட்பதற்கு விரும்பினார் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் செய்திகள் பலுகியுள்ளன, ஆனால், செவிசாய்க்கும் பழக்கம் இழக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆயினும், தாழ்மை மற்றும், கவனமுடன் செவிமடுப்பதன் வழியாக மட்டுமே, நாம் உண்மையிலேயே ஒப்புரவாக முடியும் என்றும், இந்த 2020ம் ஆண்டில், நம் தெருக்களில் பல வாரங்களாக, கவலைதரும் மௌனம் ஆட்சி செய்கின்றது, ஆயினும், இது, இந்தப் பூமிக்கோளத்தில், நலிந்தவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும், கடுமையாய்த் துன்புறும் நோயாளிகள் ஆகியோரின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்ப்பதற்கு வாய்ப்பையும் வழங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

செவிசாய்த்தல், நம் அயலவர் மற்றும், புறக்கணிக்கப்பட்டவரோடும், நம்மோடும் கடவுளோடும் ஒப்புரவாக வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளது என்று கூறியுள்ள திருத்தந்தை, வளருவதற்குப் பகிர்தல் அவசியம் என்பது பற்றியும், தன் செய்தியில் விளக்கியுள்ளார்.

வளருவதற்குப் பகிர்தல்

முதல் கிறிஸ்தவ சமுதாயத்தில் பகிர்தல் முக்கிய கூறாக இருந்தது (தி.ப. 4:32) என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பூமிக்கோளத்தின் வளங்களால், சிலர் மட்டுமே பயன்பெற வேண்டுமென்று கடவுள் விரும்பவில்லை என்றும், நாம் எல்லாரும் ஒரே படகில் இருக்கிறோம் என்பதை, தற்போதைய கொள்ளைநோய் நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

பகிர்தலுக்கு, ஒரு சிறுவன் வைத்திருந்த ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்களைக் கொண்டு, இயேசு ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்த (cf.யோவா.6:1-15)! புதுமையைச் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முன்னேற்றுவற்காக ஈடுபடுதல்      

மற்றவரை முன்னேற்றுவதற்காக ஈடுபடுதல்   என்பதற்கு, இயேசு சமாரியப் பெண்ணுடன் (cf.யோவா.4:1-30) நடத்திய உரையடாலை மேற்கோள்காட்டியுள்ள திருத்தந்தை, சிலவேளைகளில், மற்றவருக்கு பணியாற்றுவதற்கு கிடைக்கும் தூண்டுதல், அவர்களின் உண்மையான வளங்களைப் பார்ப்பதிலிருந்து நம்மைத் தடை செய்கின்றது என்று கூறினார்.

நாம் உதவிசெய்பவர்களை உண்மையிலேயே முன்னேற்ற விரும்பினால், அவர்களை ஈடுபடுத்தவேண்டும் மற்றும், அவர்களின் சொந்த மீட்பில் அவர்களுக்குப் பங்கு உள்ளது என்பதை உணர்த்த வேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, கோவிட்-19 கொள்ளைநோய், நமது கடமையுணர்வை நினைவுபடுத்துகின்றது என்று கூறியுள்ளார்.

கட்டியெழுப்புவதற்காக ஒத்துழைத்தல்

கட்டியெழுப்புவதற்காக ஒத்துழைத்தல் பற்றி விளக்குவதற்கு, உங்களிடையே பிளவுகள் வேண்டாம், ஒத்த கருத்துடையவராய் இருங்கள் (1 கொரி.1:10) என்று, திருத்தூதர் பவுல் கொரிந்து சமுதாயத்திற்குக் கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையாட்சியை கட்டியெழுப்புவது, அனைத்து கிறிஸ்தவர்களின் பொதுவான கடமை என்றும், இதனாலே, பொறாமை, பிளவு மற்றும் இணக்கமின்மை ஆகிய சோதனைக்கு உட்படாமல், ஒத்துழைப்பதற்குக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்..

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது மற்றும், அதை கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப அமைப்பதற்கு, நம்மையே அர்ப்பணிக்கவேண்டும், இதில், எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது, இதற்கு, பன்னாட்டு ஒத்துழைப்பு, உலகளாவிய ஒருமைப்பாடு மற்றும், அந்தந்த இடத்தின் அர்ப்பணம் அவசியம் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தை இயேசுவைக் காப்பாற்றுவதற்கு, எகிப்துக்கு தப்பித்துச் செல்லவேண்டிய சூழலுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட புனித யோசேப்பின் எடுத்துக்காட்டை பரிந்துரைத்து, தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார். செய்தியின் இறுதியில் புனித யோசேப்பிடம் செபித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்கத் திருஅவையில், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாள், செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது

15 May 2020, 15:36