தேடுதல்

Vatican News

திருத்தந்தை - அன்னை மரியாவிடம் உலகை அர்ப்பணித்தார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 30, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 5.30 மணிக்கு, வத்திக்கானில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை கெபியில் செபமாலை செபித்து, மனித சமுதாயம் முழுவதையும் அன்னை மரியாவிடம் அர்ப்பணித்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 30, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 5.30 மணிக்கு, வத்திக்கானில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை கெபியில் செபமாலை செபித்து, மனித சமுதாயம் முழுவதையும் அன்னை மரியாவிடம் அர்ப்பணித்தார்.

ஏறத்தாழ 130 விசுவாசிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், செபமாலையின் ஒவ்வொரு பத்து மணி செபங்களையும், கொரோனா தொற்றுக்கிருமியோடு தொடர்புடைய பெண்கள் மற்றும், ஆண்கள் செபித்தனர்.

கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள் மத்தியில் பணியாற்றும், மருத்துவர், செவிலியர், இந்நோயினின்று குணமடைந்த ஒருவர், இந்நோயில் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், இந்நோயாளிகள் பராமரிக்கப்படும் மருத்துவமனையில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணியாளர், செவிலியர் அருள்சகோதரி, மருந்தகப் பணியாளர், தன்னார்வலர்,  இந்த காலக்கட்டத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த இளம் பெற்றோர் போன்றோர், இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் செபமாலை மணிகளைச் செபித்தனர்.

இந்நிகழ்வில், உலகிலுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக, உலகெங்கிலும் அமைந்துள்ள நாற்பது அன்னை மரியா திருத்தலங்களில் கூடியிருக்கும் பக்தர்கள் திருத்தந்தையோடு இணைந்து செபித்தனர். திருத்தந்தையும், இந்நிகழ்வின் இறுதியில், இஸ்பானிய மொழியில், இலத்தீன் அமெரிக்காவில் இச்செபத்தில் பங்குபெற்றவர்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பெந்தக்கோஸ்து பெருவிழா திருவிழிப்பு நாளான இச்சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த செபமாலை பக்திமுயற்சி, “அவர்கள் அனைவரும் இயேசுவின் தாய் மரியாவோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள் (தி.ப.1,14)” என்ற தலைப்பில் இடம்பெற்றது.

30 May 2020, 19:00