தேடுதல்

Vatican News

சமுதாய விலகல் காலத்தில் திருத்தந்தையின் அருகாமைக்கு நன்றி

துன்பம்நிறைந்த இந்த காலக்கட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாந்தா மார்த்தா இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றி தங்களுடன் ஒன்றித்திருந்ததற்கு, எண்ணற்ற விசுவாசிகள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 தொற்றுக்கிருமியால் அரசுகள் விதித்திருந்த சமுதாய விலகல் என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டுவந்த காலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாள் காலையில் திருப்பலி நிறைவேற்றி, அதை நேரடி ஒளிபரப்பு செய்ததற்காக, அவருக்கு, கத்தோலிக்கர், தங்கள் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர். 

கொரோனா கொள்ளைநோயால், கடந்த மார்ச் மாதம் முதல், சமுதாய தனித்திருத்தல் கடைப்பிடிக்கப்பட்டுவருவதை முன்னிட்டு, வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில், ஒவ்வொரு நாள் காலையிலும் நிறைவேற்றும் திருப்பலியை, நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்தார்.

நவீன சமூகத்தொடர்பு ஊடகங்கள் வழியாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இத்திருப்பலிகளில், எண்ணற்ற கத்தோலிக்கர் பங்குபெற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், ஆன்மீக முறையில் ஒன்றித்து செபித்தனர்.

மே 18, கடந்த திங்களன்று, ஒருசில நாடுகள் சமுதாய தனித்திருத்தல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்தத் தொடங்கியதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலய திருப்பலிகளின் நேரடி ஒளிபரப்பை நிறைவுசெய்தார்.

துன்பம்நிறைந்த இந்த காலக்கட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு திருப்பலி நிறைவேற்றி தங்களுடன் ஒன்றித்திருந்ததற்கு, செய்திகள் மற்றும், காணொளிகளை, மின்னஞ்சல்கள் வழியாக, எண்ணற்ற விசுவாசிகள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இயலக்கூடிய இடங்களில், பங்கு ஆலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களில் நடைபெறும் திருப்பலிகளில் விசுவாசிகள் பங்குபெறுமாறும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார். 

26 May 2020, 15:00