தேடுதல்

Vatican News
கர்தினாலாக உயர்த்தப்பட்ட நாளில் (19.10.2016) கர்தினால் கோர்த்தி கர்தினாலாக உயர்த்தப்பட்ட நாளில் (19.10.2016) கர்தினால் கோர்த்தி  

கர்தினால் கோர்த்தி மறைவு, திருத்தந்தை இரங்கல்

1936ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி Galbiate என்ற ஊரில் பிறந்த கர்தினால் கோர்த்தி அவர்கள், 1959ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 12, இச்செவ்வாய் காலை 9 மணியளவில் இறைபதம் சேர்ந்த 84 வயது நிரம்பிய இத்தாலிய கர்தினால் ரெனாத்தோ கோர்த்தி (Renato Corti) அவர்களின் ஆன்மா நிறைசாந்தியடைய, தான் செபிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நொவாரா மறைமாவட்ட மக்களுக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

மிலான் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த கர்தினால் கோர்த்தி அவர்கள், இறைவனடி எய்தியதை முன்னிட்டு, நொவாரா மறைமாவட்ட ஆயர் Franco Giulio Brambilla அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பிய இரங்கல் தந்திச் செய்தியில், கர்தினால் அவர்கள், ஆண்டவர் இயேசுவுக்கும், திருஅவைக்கும் ஆற்றிய அரும்பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் நொவாரா மறைமாவட்ட ஆயராக, 1990ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை பணியாற்றிய கர்தினால் கோர்த்தி அவர்கள், 2015ம் ஆண்டு கொலோசேயும் நினைவிடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றிய புனித வெள்ளி சிலுவைப்பாதை தியானச் சிந்தனைகளை எழுதியவர்.

2016ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், Rho எனும் நகரில், அருள்பணியாளர்கள் நடத்தும் இல்லம் ஒன்றில் 2011ம் ஆண்டு முதல் ஓய்வெடுத்து வந்தார்.

ஆழ்ந்த சிந்தனைகள் கொண்ட தியான உரைகளை ஆற்றிவந்த கர்தினால் கோர்த்தி அவர்கள், 2005ம் ஆண்டில் திருப்பீடத்தில், தலைமையக அதிகாரிகளுக்குத் தியான உரைகள் வழங்கியுள்ளார். இவர், 2005ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, இத்தாலிய ஆயர் பேரவையின் உதவித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கர்தினால் கோர்த்தி அவர்களின் மறைவோடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 222 ஆகவும், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்கள் 122 ஆகவும் மாறியுள்ளன.

12 May 2020, 14:44