தேடுதல்

Vatican News
வத்திக்கான் மாளிகையில், தன் நூலகத்திலிருந்து அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் மாளிகையில், தன் நூலகத்திலிருந்து அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

இயேசுவின் துணையில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளலாம்

இதயத்தை இயேசுவுக்குத் திறந்து, வாழ்வின் சுமைகள், போராட்டங்கள், ஏமாற்றங்கள் ஆகிய அனைத்தையும் அவரிடம் ஒப்படையுங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நாம் வாழ்வின் ஏமாற்றங்களால் முடக்கப்படுதல், அல்லது, இயேசு நம்மை அன்புகூர்கிறார் என்ற, மாபெரும் மற்றும், மிக உண்மையான எதார்த்தத்தைத் தெரிவுசெய்தல் ஆகிய இரு வேறு பாதைகள், வாழ்வில் நமக்குமுன்பாக உள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார்.

ஏப்ரல் 26, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் மாளிகையில், தன் நூலகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பில் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எம்மாவு வழியில், உயிர்த்த இயேசு சீடர்களைச் சந்தித்தது பற்றிய, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (லூக். 24:13-35) மையப்படுத்தி உரையாற்றினார்.

எம்மாவுச் சென்ற வழியில் இயேசுவைச் சந்தித்த சீடர்கள் போன்று நாமும் இன்று எதிர்த் திசையில் போகக்கூடும் என்று கூறிய திருத்தந்தை, நாம் நம் ஏமாற்றங்கள் மற்றும், கடந்தகால வாழ்வின் தயக்கநிலையில் சிக்கி விடாமல், நிகழ் காலத்தில், தம்மோடு வாழ்வதற்கு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்று கூறினார்.

வாழ்வின் ஏமாற்றங்களால் ஆற்றலை இழப்பதற்கு தங்களையே அனுமதித்து, சோகத்துடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் சிலர் உள்ளனர் என்று கூறிய திருத்தந்தை, தங்களையும், தங்கள் பிரச்சனைகளையும் முதலில் வைக்காமல், இயேசுவையும், அவர்களின் சகோதரர், சகோதரிகளையும் தங்களின் முன்னே வைக்கும் மக்களின் பாதையும் உள்ளது என்று கூறினார். 

சீடர்கள் எம்மாவுக்குச் சென்ற முதல் பயணம், சோகத்திலும், அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிய பயணம் மகிழ்ச்சியிலும் இடம்பெற்றன என்று, பாஸ்கா கால மூன்றாம் ஞாயிறு நற்செய்தியை விளக்கிய திருத்தந்தை, முதல் பயணத்தில், சீடர்கள் ஏமாற்றம், மற்றும் நம்பிக்கையற்ற நிலை இருந்தன என்றும், இரண்டாவது பயணத்தில், உயிர்த்த இயேசுவைச் சந்தித்த நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கு அவர்கள் விரைந்து சென்றனர் என்றும் கூறினார். 

தன்முனைப்பு, கடந்தகால ஏமாற்றங்கள், நிறைவேறாத எண்ணங்கள், மற்றும், வாழ்வில் நடந்த பல மோசமான காரியங்களிலே வாழ்ந்துகொண்டிருப்பதை, ஒருவர் நிறுத்துவதே, அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைகிறது என்றுரைத்த திருத்தந்தை, ஒருவர், தன்னைப் பற்றிய எண்ணங்களிலிருந்து, தனது கடவுள் பற்றிய உண்மைநிலைக்குத் திரும்பவேண்டும் என்று எடுத்துரைத்தார்.

வாழ்வின் மாபெரும் மற்றும், மிக உண்மையான மெய்மையைத் தொடர்ந்து தேட வேண்டும், இயேசு வாழ்கிறார், இயேசு என்னை அன்புகூர்கிறார் என்பதே மாபெரும் உண்மை என்றும், என்னால் மற்றவருக்கு ஏதாவது உதவமுடியும் எனில், அதுவே மிகவும் அழகானது, மகிழ்வுதருவது என்றும் திருத்தந்தை கூறினார்.

கடவுள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், நான் விரும்பியவாறு நடந்திருந்தால், இதை அல்லது, அதை நான் கொண்டிருந்தால் போன்ற, கடந்தகாலத் தொக்கி நிற்றல்களிலிருந்து கடந்துவந்து, ஆம், கடவுள் வாழ்கிறார், அவர் என்னோடு நடக்கிறார், நாளை அல்ல, இன்று என்ற எண்ணங்களை நோக்கி வாழ்வைச் செலுத்தினால், இயேசுவின் உயிர்ப்பு பற்றி அறிவிக்க, எம்மாவு ஊரிலிருந்து திரும்பிச் சென்ற சாலையில் நாமும் செல்வோம் என்று திருத்தந்தை கூறினார்.  

தற்போது ஒவ்வொருவரும் கடந்த காலத்திலே வாழ்ந்துகொண்டிருக்காமல், இந்த நிகழ்காலத்தில் கடவுளைக் காண்பதற்கு மூன்று படிமுறைகளைப் பரிந்துரைத்த திருத்தந்தை, முதலில், இதயத்தை இயேசுவுக்குத் திறந்து, வாழ்வின் சுமைகள், போராட்டங்கள், ஏமாற்றங்கள் ஆகிய அனைத்தையும் அவரிடம் ஒப்படைப்பது முதல் படிமுறை என்று கூறினார்.

இன்றைய லூக்கா நற்செய்திப் பகுதியை வாசித்து, அப்பகுதி வழியாக இயேசு கூறுவதை உற்றுக்கேட்பது இரண்டாவது படிமுறை என்றும், ஆண்டவரே, எம்மோடு தங்கும் என்ற சீடர்களின் சொற்களால் செபிப்பது மூன்றாவது படிமுறை என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆண்டவரே என்னோடு, எம்மோடு தங்கும், ஏனெனில் வாழ்வின் பாதையைத் தெரிவுசெய்ய உமது உதவி எமக்குத் தேவை என்று செபிப்போம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் ஒவ்வொரு நாளும் நற்செய்தியை வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

27 April 2020, 14:31