தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

மருத்துவமனையிலுள்ள ஆயருடன் தொலைப்பேசியில் திருத்தந்தை

கொரோனா தொற்றுக்கிருமி பாதிப்பால் துன்புற்றுவரும் ஆயர் Olivero அவர்கள், தற்போது குணமடைந்து வருகிறார், மருத்துவர்கள் மற்றும் செவிலியருடன், ஆண்டவரும், அன்னை மரியாவும் புதுமையை ஆற்றுகின்றனர் - Pinerolo மறைமாவட்டம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 18, இச்சனிக்கிழமை காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மற்றும், மறையுரையை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்திகளையும் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“கோவிட்-19 கிருமியால் தாக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் மற்றும், செவிலியரின் பணி எவ்வளவு கடினமானது என்பதை நினைவுகூர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும், அவர்களுக்குச் சிகிச்சை வழங்கும் அனைவருக்காகவும், நாம் எல்லாரும் செபிப்போம்” என்ற சொற்கள், #PrayTogether என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.

திருத்தந்தை வெளியிட்ட 2வது டுவிட்டர் செய்தியில், “திருத்தூதர்களின் துணிவு எங்கிருந்து வந்தது? அது தூய ஆவியாரின் கொடையாகும். துணிவு, மனஉறுதி ஆகியவை, பெந்தக்கோஸ்து நாளில் ஆண்டவர் அளித்தவை. கிறிஸ்தவ மறைப்பணி, தூய ஆவியாரின் கொடையிலிருந்து பிறக்கின்றது” என்ற வார்த்தைகள், #HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் இடம்பெற்றிருந்தன.

தொலைப்பேசி உரையாடல்

கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள் மற்றும், அவர்களைப் பராமரிக்கும் அனைவரையும் ஒவ்வொரு நாளும் நினைத்து செபித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கிருமியின் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் இத்தாலியின் Pinerolo மறைமாவட்டத்தின் ஆயர் Derio Olivero அவர்களை, தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார்.

திருத்தந்தை, தன்னை தொலைப்பேசியில் அழைத்துப் பேசியது குறித்து, அம்மறைமாவட்ட முதன்மை குரு Gustavo Bertea அவர்களிடம் தெரிவித்த ஆயர் Olivero அவர்கள், இந்நிகழ்வு, நம் சிறிய மறைமாவட்டத்திற்கு நல்ல செய்தி என்று கூறினார்.

தான் சிகிச்சை பெற்றுவரும் "Agnelli" மருத்துவமனை பற்றி திருத்தந்தையிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார், ஆயர் Derio Olivero.

கடந்த மார்ச் மாதம் 19ம் தேதியிலிருந்து, கொரோனா தொற்றுக்கிருமி பாதிப்பால் துன்புற்றுவரும் ஆயர் Olivero அவர்கள், தற்போது குணமடைந்து வருகிறார் என்றும், மருத்துவர்கள் மற்றும் செவிலியருடன், ஆண்டவரும், அன்னை மரியாவும் புதுமையை ஆற்றுகின்றனர் என்றும், Pinerolo மறைமாவட்ட இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

18 April 2020, 13:38