தேடுதல்

Vatican News
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் புனித வெள்ளி சிலுவைப்பாதை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் புனித வெள்ளி சிலுவைப்பாதை  (Vatican Media)

புனித வெள்ளி தியானத்தைத் தயாரித்த கைதிகளுக்கு நன்றி

வழக்கமாக உரோம் கொலோசேயும் நினைவிடத்தில் நடைபெறும் புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சி, இவ்வாண்டு கொரோனா தொற்றுக்கிருமி பரவல் நிலை காரணமாக, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்றது.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 10, இவ்வெள்ளி உரோம் நேரம் இரவு ஒன்பது மணிக்கு, மக்கள் யாருமின்றி காலியாக இருந்த வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற, புனித வெள்ளி சிலுவைப்பாதை தியானச் சிந்தனைகளைத் தயாரித்த சிறைக் கைதிகளுக்கு  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுப்படையாக நன்றி தெரிவித்தார்.

தொலைக்காட்சியில் நேரிடையாக ஒளிபரப்பப்பட்ட இந்த சிலுவைப்பாதை தியானச் சிந்தனைகளை, இத்தாலியின் பதுவை நகர் Due Palazzi பங்கிலுள்ள சிறைக் கைதிகள் மற்றும், அந்தப் பங்கைச் சார்ந்தோர் தயாரித்தனர்.

வழக்கமாக உரோம் கொலோசேயும் நினைவிடத்தில் நடைபெறும் புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சி, இவ்வாண்டு கொரோனா தொற்றுக்கிருமி பரவல் நிலை காரணமாக, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்றது.

சிலுவைப்பாதையின் 14 நிலைகள் ஒவ்வொன்று பற்றியும், கைதிகள், குடும்பத்தினர் மற்றும் கைதிகளோடு தொடர்புடையோர் தியானச் சிந்தனைகளை எழுதியுள்ளனர்.

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதி, கொலைசெய்யப்பட்ட ஒரு மகளின் பெற்றோர், ஒரு கைதி, ஒரு கைதியின் அன்னை, ஒரு வேதியர், ஒரு கைதி, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் மகள், ஒரு கைதி, சிறையில் கற்பிக்கும் ஆசிரியர், குற்றம் சாட்டப்பட்டு பின்னர், விடுதலை செய்யப்பட்ட ஓர் அருள்பணியாளர், ஒரு நீதிபதி, ஒரு தன்னார்வல அருள்சகோதரர், சிறை அதிகாரி போன்றோர், இத்தியானச் சிந்தனைகளைத் தயாரித்துள்ளனர்.

இத்தியானச் சிந்தனைகள், ஒரு கதையை வாசிப்பதுபோல் மிகவும் ஆறுதலாக இருந்தன என்று கூறிய திருத்தந்தை, தங்களின் கதைகளைப் பகிர்ந்துகொண்ட பங்கு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். கடவுள் தம்மை பற்றியே சொல்வதுபோலவும், ஒரு கதைக்குள் நம்மிடம் பேசுவது போலவும் அவை இருந்தன, அவற்றை நாம் கவனத்துடனும், இரக்கத்துடனும் உற்றுக்கேட்பதற்கும் அழைப்பு விடுக்கின்றன என்றும் திருத்தந்தை கூறினார். 

11 April 2020, 15:25