தேடுதல்

Vatican News
மருத்துவர் அருள்சகோதரி  Angel Bipendu மருத்துவர் அருள்சகோதரி Angel Bipendu 

கோவிட்19 நோயாளிகளுக்குப் பணியாற்றும் துறவிக்கு நன்றி

கோவிட் 19 நோயாளிகள் மத்தியில் பணியாற்றும், மருத்துவரான அருள்சகோதரி Bipendu அவர்கள், மத்தியதரைக் கடல் வழியாக இத்தாலிக்குப் பயணம் மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோரைக் காப்பாற்றும் பணியிலும் பணியாற்றியிருக்கிறார்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் அச்சுறுத்தல் சூழலில், நம் மத்தியில் ஒன்றிப்பு நிலவ, அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 14, இச்செவ்வாயன்று நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, தன் முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஒன்றுசேர்ந்து செபிப்போம் என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்டுள்ள முதல் டுவிட்டர் செய்தியில், நம் மத்தியில் ஒன்றிப்பின் அருளை ஆண்டவர் வழங்குமாறு, நாம் எல்லாரும் சேர்ந்து செபிப்போம், இந்த இக்கட்டான நேரங்களில், நம்மைப் பிணைக்கும் கூட்டுப்பண்பையும், பிரிவினையைவிட மிகவும் பெரியதான ஒன்றிப்பையும் கண்டுணர அவர் நம்மை அனுமதிப்பாராக என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. 

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றும் காலை திருப்பலியை யூடியூப்பில் காண்பதற்கு உதவியாக, அதன் முகவரியும், https://www.youtube.com/watch?v=vAoPpzpQWyk திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியுடன் இணைத்து தரப்பட்டுள்ளது. 

மருத்துவர் அருள்சகோதரி

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள் மத்தியில் முழுவீச்சுடன் பணியாற்றும், மருத்துவர் அருள்சகோதரி ஒருவரை, திடீரென தொலைபேசியில் அழைத்து, தனது நன்றியைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட் 19 கிருமியால் கடுமையாய்ப் பாதித்துள்ள, வட இத்தாலியின் பெர்கமோ பகுதியின் Villa d’Almè மருத்துவமனையில், சிறப்புப் பராமரிப்புப் பிரிவில், முழு பாதுகாப்பு கவசங்களுடன் பணியாற்றும், மருத்துவரான அருள்சகோதரி Angel Bipendu அவர்களுக்குத் தொலைபேசி வழியாக நன்றி தெரிவித்து ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 11, புனித சனிக்கிழமையன்று, Villa d’Almè மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த அருள்சகோதரி  Bipendu அவர்கள், அங்கு திடீரென ஒலித்த தொலைபேசியைக் கையில் எடுத்தபோது, “வத்திக்கான் நகரிலிருந்து அழைக்கின்றேன், அருள்சகோதரி Bipendu அவர்கள் ஆற்றும் பணிக்கும், உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்ற குரலைக் கேட்டுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த அச்சகோதரி, தாங்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களா? என்று கேட்டவுடன், ஆமாம், தாங்கள் ஆற்றும் பணிக்கும், தாங்கள் வழங்கிவரும்  விசுவாசச் சான்றுக்கும் நன்றி கூற விரும்புகிறேன், இக்கொள்ளை நோய் முடிவுற்றபின், தங்களைச் சந்திக்க விரும்புகிறேன் என்று திருத்தந்தை கூறியுள்ளார். 

அருள்சகோதரி Bipendu

ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயகக் குடியரசைச் சேர்ந்த அருள்சகோதரி Bipendu அவர்கள், இத்தாலியின் பலேர்மோவில் மருத்துவக் கல்வியை முடித்து, கடந்த 16 ஆண்டுகளாக, இத்தாலியில் பணியாற்றி வருகிறார்.

மத்தியதரைக் கடல் வழியாக இத்தாலிக்குப் பயணம் மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோரைக் காப்பாற்றும் பணியில், 2016 மற்றும், 2017ம் ஆண்டுகளில், மால்ட்டா பக்த அமைப்புடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார், மருத்துவரான அருள்சகோதரி Angel Bipendu. இவர், மீட்பரின் அருள்சகோதரிகள் சபையைச் சார்ந்தவர்.

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அருள்சகோதரி Bipendu அவர்கள் பணியாற்றும், வட இத்தாலியின் லொம்பார்தியா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

14 April 2020, 13:44